கோவில்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவர்களின் குறைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டத்தின் படி, தூத்துக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நாளை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் ஆணைப்படி, கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய மூன்று கோட்டங்களில் உள்ள ற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்டமாக கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் 23.09.2023 அன்று கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்கள் கலந்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாதவர்கள் இந்த முகாமில் பதிவு செய்யலாம். இதுவரை முதலமைச்சர் காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் முகாமில் கலந்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், ஆதார் பெற இயலாதவர்களுக்கு சிறப்பு ஆதார் முகாம் மற்றும் மருத்துவ துறையின் மூலம் பொது மருத்துவ சேவை வழங்கப்படும்.
மேலும், 90 சதவீதத்துக்கும் அதிக பாதிப்புடைய கை, கால் பாதிக்கப்பட்ட நபர்கள், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள், மூளை முடக்குவாதம் மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கான கூடுதல் பராமரிப்பு உதவித்தொகை வேண்டுபவர்கள் முகாமில் நடைபெறும் மருத்துவகுழுவின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
எனவே, கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu