2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறை
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில் ராஜ்குமார் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் கண்டுபிடிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. முன்னிலையில் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ‘காவல்துறையின் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவு (CCTNS)’ மூலம் விசாரணை மேற்கொண்டு காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவு (CCTNS) உதவி ஆய்வாளர் விக்டோரியா அற்புதராணி தலைமையில் தலைமை காவலர்கள் செந்தில் மற்றும் கிறிஸ்டி பெமிலா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், தனிப்படை காவல்துறையினர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை காவல்துறை கடந்த 06.04.2023 அன்று நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாசரேத் வகுத்தான்குப்பம் சாலையில் உள்ள நல்ல சமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று அங்கு இருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோடு இந்திராநகரைச் சேர்ந்த நாகு மகன் ராஜ்குமார் (34) என்பதும், அவர் தனது வீட்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதும் தெரியவந்தது. திருச்செந்தூர் பகுதிகளில் சுற்றி திரிந்த அவரை நாசரேத் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தினர் மீட்டு கடந்த 6 மாதமாக பாராமரித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (13.04.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் முன்னிலையில், ராஜ்குமாரின் சகோதரியான சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமியிடம் ராஜ்குமாரை காவல்துறையினர் ஒப்படைத்தனர். அப்போது நாசரேத் நல்ல சாமாரியன் மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தின் நிர்வாகி கிளாட்வின் ஜோசப் மற்றும் பிரசித் ஆகியோர் உடனிருந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவரை கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையின் குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்பு இணையதள பிரிவுக்கு (CCTNS) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!