பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
X

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமுகத்தம்மாள தம்பதியருக்கு மகனாக 1760 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். கட்டபொம்மன் வீரசக்கம்மாள் என்பவரை மணமுடித்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால் தந்தைக்கு உதவியாக இருந்தார்.

கட்டபொம்மன் பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790 ஆம் ஆண்டில் 47ஆவது பாளையக்காரராக அரியணை பொறுப்பை ஏற்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை பொறுப்பை ஏற்ற அதே சமயத்தில் ஆங்கிலேயர்கள் பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கினர். பாளையக்காரர்கள்; அனைவரிடம் இருந்து கப்பம் பெற்றுக்கொண்ட ஆங்கிலேயர்களால் கட்டபொம்மனிடம் தங்கள் சர்வாதிகாரம் பலிக்காமல் அவமானம் அடைந்தனர்.

அதனால் சமாதானம் பேசுவது என்ற போர்வையில் கட்டபொம்மனுக்கு தூது அனுப்பினார்கள். ஜாக்சன் துரை என்பவர் வரி கட்டுமாறு கட்டபொம்மனை பணித்தார். ஆனால் கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடம் நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்று எதிர்த்துப் பேசினார். அங்கே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியாகி கைகலப்பில் முடிந்தது. ஆங்கிலேயரின் இந்த திட்டமிட்ட வஞ்சக வலையில் சிக்காமல் தன் வீரத்திறமையால் அங்கிருந்து தப்பினார். வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அனைவர் மனதிலும் வீரத்தை விதைத்தது. இதனால் ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது போர் தொடுத்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பின் கைது செய்யப்பட்டார். பின் கயத்தாறு புளிய மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென ஆங்கிலேயர்கள் அறிவித்தனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைக் கேட்கவுமில்லை. மாறாக கம்பீரத்தோடு எனது தாய்மண்ணைக் காப்பதற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையக்காரர்களைத் திரட்டினேன். போர் நடத்தினேன் என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார். தூக்குமேடை ஏறிய போதும், அவரது பேச்சில் வீரமும் தைரியமும் நிறைந்திருந்தது. அக்டோபர் 19ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா ஆண்டுதோறும் சித்திரை திங்கள் கடைசி வெள்ளி அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர் வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரையின் வீட்டிற்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். நிகழ்ச்சியில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திருவாசன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ், வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுதாரர்கள், வீரசக்க தேவி ஆலயக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....