தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கனிமொழி எம்.பி.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. காசோலை வழங்கினார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த விசாரணை ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 19-10-2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று காசோலை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தவிர மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
மருத்துவ முகாம்
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமம் சென்னை வடபழனி போர்டிஸ் மருத்துவமனை நடத்தும் பல்துறை இலவச சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இலவச சிறப்பு மருத்துவ முகாமை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இந்த முகாமில் இருதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், இருதய அறுவைசிகிச்சை, எலும்பியல் நோய், வலி மருத்துவம், பெண்கள் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ, வயிற்று ஸ்கேன், போன் டென்சிட்டி, பிப்ரோ ஸ்கேன் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்தனர்.
நலத்திட்ட உதவிகள்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தூத்துக்குடி தருவை மைதானம் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா 2022 கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 313 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி விழாவில் பேருரையாற்றினார்.
இந்த விழாவில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu