தீப்பெட்டி தொழிற்சாலை கழிவுகள், காகித தொழிற்சாலை பயன்பாடாகும் : ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி, துடிசியா அலுவலகத்தில் "தொழில் முனைவோருக்கான தீர்வு மையம்" தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தில் "தொழில் முனைவோருக்கான தீர்வு மையம்" தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தொழில் முனைவோருக்கான தீர்வு மைய செயல்பாட்டினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கான திட்ட வழிமுறைகள் குறித்தும் தொழில் நிறுவன கண்காட்சி அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துதல் தேவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் பற்றியும் விளக்கப்பட்டன.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழகத்திலேயே முதல்முறையாக தொழில்முனைவோருக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான தீர்வு மையம் தூத்துக்குடி துடிசியாவில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், புதிதாக தொழில் முனைவோர்களை உருவாக்கும் பொருட்டும் மாவட்ட தொழில் மையம் மற்றும் துடிசியா ஆகியவை இணைந்து மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் 25 சதவீத மானியத்துடன் கூடிய தொழில் கடனை பயிற்சியுடன் வழங்கி வருகிறது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க விரும்பும் தொழில்முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு அந்த இலக்கு இரட்டிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி சிட்கோ தொழிற்பேட்டையில் 150க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் கிடைக்கும் கழிவுகளில் 30 சதவீதத்தை மட்டுமே அங்குள்ளவர்கள் மறு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்கின்றனர். மீதமாகும் கழிவுகளை அப்பகுதியில் காகித உற்பத்தி தொழிற்சாலை அமைத்து பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. இது தவிர மதுரை-தூத்துக்குடி இடையே தொழிற்பூங்கா வர உள்ள நிலையில் முக்கியமான பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு சிறு குறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் உள்ளன. அதில் கோவில்பட்டியும் உள்ளடங்கும். விளாத்திகுளத்தில் வத்தல் சாகுபடிக்கான குளிர்பதன கிடங்கு செயல்பட்டு வருவது போல் அங்கு விளைவிக்கப்படும் மானாவாரி பயிர்களான உளுந்து, பாசி ஆகியவற்றை தரம் பிரித்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைப்படுத்துவதற்கு தொழிற்சாலைகள் அமைக்கப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சொர்ணலதா, துடிசியா தலைவர் கே.நேருபிரகாஷ், பொது செயலாளர் ஜெ.ராஜ் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu