தூத்துக்குடியில் போதை விழிப்புணர்வு மாரத்தான், சைக்கிள் போட்டி: எஸ்.பி. பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாரத்தன் மற்றும் சைக்கிள் போட்டியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் ‘ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி” சார்பாக நடைபெற்ற ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" ("ENAKKU VENDAM NAMAKU VENDAM & Say No to Drugs”) என்ற அடிப்படையில் விழிப்புணர்வு ‘டுயத்லான்” (DUATHLON) எனப்படும் மாரத்தான் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மன அழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" என்ற அடிப்படையில் போதைபொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வை வலியுறுத்தியும் இன்று (16.04.2023) காலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட (DUATHLON) எனப்படும் ‘மராத்தான் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
நான்கு பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் சுமார் 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தங்க நாணயங்களையும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பதக்கங்கள் மற்றம் சான்றிதழ்களையும் பரிசு வழங்கி பாராட்டினார்.
பரிசுகளை வழங்கி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியது:
நமது உடல் ஆரோக்கியம் தான் நமது பாதி சொத்து, எனவே நீங்கள் எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறீர்களோ அந்த அளவிற்கு வாழ்க்கை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். மேலும் இளைஞர்கள் ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்" ("ENAKKU VENDAM NAMAKU VENDAM”) என்ற உறுதி மொழி ஏற்று போதைக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும்.
சிலர் கஞ்சா போன்ற போதைகளுக்கு அடிமையாகி தொடர்ந்து உபயோகிப்பதால் இளம் வயதிலேயே ஆண்மையை இழந்து அவர்களது உடல் நலக்குறைவுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாவதை தவிர்க்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலும் போதை பொருள் நடமாட்டம் இல்லை. நமது மாவட்டத்தை முழுமையாக போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றுவதே காவல்துறையின் தலையாய கடமையாகும். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் இயக்குநர் இம்மானுவேல், அன்னை ஜூவல்லர்ஸ் பிரபு, எஸ்.ஏ.வி. மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த பாலாஜி, திட்ட அமைப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu