தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர்
தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி கட்டி பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா தற்போது தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் மஞ்சு விரட்டு, ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை இந்த திருவிழாவில் படைப்பது வழக்கம். மேலும் தங்களது விவசாயத்திற்கு பயன்படும் மாடு மற்றும் விவசாய பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து வழிபட்டு அவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி கூறுவது தமிழக தமிழர்களின் கலாசார நிகழ்வுகளில் ஒன்று. பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்வு பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் தமிழ் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டாடி வருகின்றனர்.அமெரிக்கா, இங்கிலாந்து, எஸ்டோனியா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 37 பேர் சென்னைக்கு வந்து, ஹங்கேரியை சேர்ந்த தனியார் அமைப்பு மூலம் அங்கிருந்து ஆட்டோவில் தென் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான பண்ணையில் பொங்கல் கொண்டாடினர்.
தமிழக மரபுப்படி ஆண்கள் வேட்டி சட்டை அணிந்தும், பெண்கள் 17 குழுக்களாக சேலை கட்டியும் மண் பானையில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இறுதியில் அவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் மோர்கன் கூறுகையில், தமிழகத்தின் பாரம்பரியத்தை அறிந்து கொள்வதற்கு பொங்கல் பண்டிகை ஒரு நல்ல வாய்ப்பு என்றார். அப்போது வெளிநாட்டினர் பொங்கல் கொண்டாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu