தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாகவும், பட்டா நிலங்களில் சவுடு மண் திருட்டு அளவுக்கு அதிகமாக எடுக்கப்படுவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் மார்த்தாண்டம்பட்டி பகுதியில் அதிகளவு கனிம வளக் கொள்ளை நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாய சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதற்காக பட்டா நிலத்தில் சவுடு மண் என்ற பெயரில் ஆற்று மணலை அனுமதியின்றி முறைகேடாக அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டியும், அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டியும் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக புகார் தெரிவித்தனர்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மார்த்தாண்டம்பட்டியில் அரசு அனுமதி அளித்த இடத்தில் இல்லாமல் விவசாய நிலத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிக்கே தெரியாமல் முறைகேடாக மணலை அள்ளி மணல் கொள்ளையர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, உடன்குடி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் நடைபெறும் கனிமவள கொள்ளையை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், அதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ai powered agriculture