நீர்நிலைகள் அருகே சிறுவர்களை அனுமதிக்காதீர்: தூத்துக்குடி எஸ்.பி. வேண்டுகோள்

நீர்நிலைகள் அருகே சிறுவர்களை அனுமதிக்காதீர்: தூத்துக்குடி எஸ்.பி. வேண்டுகோள்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

நீர்நிலைகள் அருகே சிறுவர்களை செல்ல அனுமதிக்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள சிவலார்பட்டி குளத்தின் அருகே விளையாடச் சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்து உள்ளனர். அந்த சிறுவர்களின் மறைவுக்கு தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து உள்ளார்.

மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி இதுபோன்ற துயரமான சம்பவம் இனி வருங்காலங்களில் நடக்காமல் குழந்தை செல்வங்களை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளுமாறு அனைத்து பெற்றோர்களையும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் அங்குள்ள குளத்தின் அருகே விளையாடச் சென்றபோது நீரில் மூழ்கி இறந்து உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் அருகில் உள்ள கடற்கரை, ஆற்றங்கரை, கண்மாய், குளம் போன்ற நீர் நிலைகளுக்கு குளிப்பதற்கோ, விளையாடுவதற்கோ, நீச்சல் பயில்வதற்கோ ஆர்வத்துடன் இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் தனியாக செல்வதற்கு அனுமதிக்காதீர்கள்.

மேலும், சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்து அதை ஓட்ட அனுமதிப்பது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றமாகும். அதைப் பெற்றோர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதுதவிர சிறுவர், சிறுமியர்களை திருவிழாக்களுக்கு கூட்டிச் செல்லும்போது அங்குள்ள வண்ண மின் விளக்குகள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் அருகில் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதே போன்று விளையாடுவதற்கு சிறுவர், சிறுமியர் கைகளில் செல்போனை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் வீட்டின் மொட்டை மாடிகளுக்கு பெற்றோர்கள் இல்லாமல் தனியாகச் சென்று விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது முழு கவனம் செலுத்தி அவர்களை தங்களின் நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்புடன் செயல்படுமாறு அனைத்து பெற்றோர்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....