கொரோனா உதவித்தொகை ரூ.2000 வழங்கும் பணி :- கனிமொழி எம்.பி. துவக்கினார்

கொரோனா உதவித்தொகை ரூ.2000 வழங்கும் பணி :- கனிமொழி எம்.பி. துவக்கினார்
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா உதவி தொகை ரூ 2000ம் வழங்கும் பணியை கனிமொழி எம்.பி. தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவித் தொகையாக 4000 ரூபாய் வழங்கப்படுமென திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண உதவியாக ரூ.4000 வழங்க உத்தரவிடப்பட்டது.

இதில் முதற் கட்டமாக ரூ 2000 ரூபாய் வழங்குவதற்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள கூட்டுறவு பண்டகசாலையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், கூட்டுறவு துறை இணை பதிவாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா உதவி தொகை ரூ.2000-த்தை கனிமொழி எம்பி வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில், ஊரடங்கு காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஆட்சியாளர்களிடம் வலியுறுத்தினார்.

ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசாங்கம் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தேர்தல் வாக்குறுதியின்படி 4000 ரூபாய் உதவித்தொகை வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கவும், பால் விலையை குறைத்தும், கொள்முதல் விலையை அதிகரித்தும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஆகவே மக்களுக்கு பயன்படுகிற திட்டங்களை செயல்படுத்தும் அரசாக திமுக அரசு அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றுவதற்கு மக்கள், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். பொதுவெளியில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

இதை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 4.96 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 98.69 கோடி ரூபாய் அளவுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!