தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு பற்றி ஆட்சியர் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு பற்றி ஆட்சியர் ஆலோசனை
X

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான காவல்துறை, வருவாய்த்துறை, மதுவிலக்கு அமல் பிரிவு, மருத்துவத்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், உதவி ஆட்சியர் கௌரவ்குமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றுப்படுகை பகுதிகளிலும், வல்லநாடு மலைப்பகுதிகளிலும், மற்றும் மாவட்டம் முழுமைக்கும் குறிப்பாக சாத்தான்குளம், முறப்பநாடு மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் சாராயம் காய்ச்சப்படுகிறதா? கோவில் திருவிழாக்களின் போது சாராய விற்பனை ஏதும் நடைபெறுகிறதா? கள் விற்பனை ஏதும் நடைபெறுகிறதா? என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு காவல் துறையின் மூலம் கள்ளச்சாராயம் குறித்த பொதுமக்களின் தகவல்களை பெறும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட வாட்ஸ் ஆப் எண் 8300014567, 9514144100 மூலம் பெறப்படும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் அனுமதி பெறாத பார்கள், சந்துக்கடைகள் மற்றும் மது விற்பனை செய்யும் தாபாக்களை சீல் வைத்து உரிமையாளர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுவிலக்கு குற்றங்களுக்கு சிறைதண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படுகிறது. 2023-2024-ஆம் ஆண்டிற்கான மறுவாழ்வு நிதி பெற தகுதியான நபர்களின் பட்டியலினை காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமல் பிரிவு) தர வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 142 டாஸ்மாக் கடைகளின் கடந்த 5 ஆண்டுகளுக்கான விற்பனை விபரத்தினை சேகரித்து, குறைவான விற்பனை பகுதிகளில் அப்பகுதி விற்பனை மேற்பார்வையாளர் மூலம் விபரம் சேகரித்து கள்ளச்சாராயம் புழக்கத்தில் உள்ளதா? என்பதை ஊர்ஜிதம் செய்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்


மாவட்டத்தில் அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத பார்களின் பட்டியலை காவல் துறைக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டார். பார்கள்அனுமதிக்கப்பட்ட பரப்பளவில் தான் செயல்படுகிறதா? அல்லது விதிமீறல் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணித்திட வேண்டும்.

பார்களில் அனுமதியின்றி உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகிறதா? போலி மதுபான பார்கள் எதுவும் செயல்படுகிறதா? மதுபானங்களில் பாட்டில் மூடி சரியாக சீல் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் கெட்டு போன உணவுப்பொருட்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதையும், காலி மது பாட்டில்கள் சேமிக்கப்பட்டு அவை சட்டவிரோதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டார். பாண்டிச்சேரி மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணித்திட வேண்டும்.

கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக வருவாய் வட்டாட்சியர்கள் தங்களது வட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோருக்கான ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும். அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தங்களது வட்டத்திற்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொள்ள தகவல் தெரிவிக்க வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் கடைகள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் மெத்தனால் தொழிற்சாலை உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதா? உரிய உரிமதாரர்களுக்கு விற்கப்படுகிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் அனைத்து துறை அலுவலர்களும் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் பணியில் சுணக்கம் ஏதுமின்றி தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை பரிமாறி கூட்டு நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையினை அடைய ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....