மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் முதல்வர்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்

தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 2,965 பயனாளிகளுக்கு ரூ. 22.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 2000 என இரு தவணைகளாக மொத்தம் ரூ. 4000 வழங்கினார். நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தினை வழங்கி தாய்மார்களை காக்கும் முதல்வராக அவர் உள்ளார்.
மேலும், கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள கடன்கள், விவசாய கடன், 5 பவுன் நகைக்கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்தார். தமிழ்நாடு முதல்வர் மக்களுக்காக தொடர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தொடர் திட்டம் என்றால் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 என்றால் அது தொடர்ந்து வழங்கப்படும். இதேபோல் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள் ஆகியோருக்கான உதவித்தொகையும் தொடாந்து வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் தந்து இருக்கிறார்.
அதேபோல தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, எந்த பகுதியாக இருந்தாலும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு அத்தனை பேருக்கும் உதவி செய்யக்கூடியவர்களாக விளங்கி வருகிறார். தமிழக முதல்வரை எந்த சக்தியாலும் தொட முடியாத நிலையை உருவாக்குகின்ற வகையில் மக்கள் சக்தியான நீங்கள் என்றென்றும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu