தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கைது

தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கைது
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஆலைக்கு எதிராக மக்கள் மீண்டும் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். அப்போது, ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர். நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடி சீல் வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும், ஆலையை பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், ஸ்டெர்லைட் ஆலைக்கு பராமரிப்பு பணி மற்றும் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்ற தமிழக அரசு அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தியும், கலவரத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே சென்று மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு வழங்க வேண்டும் என காவல் துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால், போலீசார் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே சென்று ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க கேட்டுக் கொண்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து திருநெல்வேலி- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்பு மக்கள் இயக்க கூட்டமைப்பினர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதையெடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!