பெண்களுக்கு ஆபாசபடம் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கொத்தனார் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களுக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாலியல் தொந்தரவு செய்த நபர் யார் என விரைந்து கண்டுபிடிக்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் செல்போனில் ஆபாசமான வார்த்தைகளில் பேசியும், புகைப்படங்கள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு செய்து வந்தவர் புதுக்கோட்டை, கூட்டாம்புளியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் கிருஷ்ணவேல் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொத்தனாராக வேலைபார்த்து வரும் இவர், இதுபோல பல பெண்களின் செல்போன் எண்களை எடுத்து, அவர்களது செல்போனில் அவர்களிடம், ஆபாசமான வார்த்தைகளில் பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் இவ்வாறு செல்போன்களில் பேசிவிட்டு, பிடிபடாமல் இருப்பதற்காக வேறு புதிய நம்பரை மாற்றிக் கொள்வது போன்ற செயல்களின் மூலம் போலீசாரின் பிடியில் சிக்காமலே இருந்து வந்தார். சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். மேலும் அவர், பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியை கைது செய்த, சைபர் குற்றப்பிரிவு போலீசாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
பின்னர் அவர் கூறுகையில், அந்நிய நபர்களிடமிருந்து ஆபாசமாக வரும் குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ் ஆப் செய்தி, ஆடியோ மற்றும் வீடியோ போன்றவற்றிற்கு பெண்கள் எவ்வித பதிலும் அளிக்க வேண்டாம். அவர்களது எண்களை பிளாக் செய்து விட்டு, காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும் .
இதுபோன்ற தவறு, செய்பவர்களை எளிதாக கண்டுபிடிப்பதற்காக தனியாகவே சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. ஏதேனும் பிரச்னை ஏற்படும், பெண்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் புகார் அளிக்கலாம். அவர்களது பெயர் மற்றும் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu