ஓட்டப்பிடாரம் அருகே தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம்
எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.கைலாசபுரம் பகுதியில் புதிதாக தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம் , உமரிகோட்டை உள்பட சுற்றுவட்டாரத்தில் உள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி ஆகியோரை நேரில் சந்தித்து சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் பொதுமக்கள் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த பதிலும் தரவில்லை என தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த கிராம பொதுமக்கள் தனியார் சிமெண்டு தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.கைலாசபுரத்தில் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், 7 கிராம மக்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் திரண்டு கைலாசபுரத்திலிருந்து புதியம்புத்தூர் செல்லும் சாலை வழி நெடுகிலும் ஆலை அமைய எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகள் ஏந்தி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
போராட்டம் குறித்து கிராம பொதுமக்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எஸ்.கைலாசபுரம் கிராமத்தில் சிமெண்ட் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் ஊருக்கு மிக அருகாமையிலும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் விதத்திலும் சிமெண்ட் தொழிற்சாலை அமைவதற்கு எங்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே கிராமத்திற்கு மிக அருகிலேயே சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக அதிகாரிகளிடம் முறையிட்டதற்கு எந்த பதிலும் இல்லாத நிலையில், சிமெண்ட் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தினை பார்ப்பதற்கும் அங்கு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பகட்ட முயற்சிகளை செய்வதற்கும் தொடர்ச்சியாக ஆட்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே கிராம மக்களின் எதிர்ப்பினை பதிவு செய்யும் விதமாக இன்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
சிமெண்ட் தொழிற்சாலை அமைப்பதற்கு கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 10 பேருக்கு மட்டுமே சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மற்ற அனைவரும் ஆதரவு தெரிவிப்பதாகவும் பொய்யான தகவல் அறிக்கையை அரசுக்கு வழங்கியுள்ளனர். இதை மறுக்கும் விதமாக இன்று சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு எங்களது எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளோம். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், கால்நடை தீவனத்தை அழிக்கும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையிலான எந்த தொழிற்சாலையும் இங்கு அமைக்க வேண்டாம்.
இங்கு தொழிற்சாலை அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே நீர்நிலை, மருத்துவமனை, ரயில் நிலையம், பள்ளிக் கூடம் மற்றும் 270 கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் நீரேற்று நிலையம் உள்பட அனைத்து வாழ்வாதாரங்களும் மிக அருகிலேயே உள்ளது. இவற்றை சீரழிக்கும் நோக்கில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். ஊருக்கு வெளியே இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வேறு நல்ல தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்தால் அதனை ஊர்மக்கள் கட்டாயம் வரவேற்போம் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu