கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன.. சுப்பராயன் எம்.பி. பேச்சு...
கோவில்பட்டியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியன் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் சுப்பராயன் எம்.பி. பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பேரவைக் கூட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கரும்பன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்தியாவிலேயே உத்திரப்பிரதேசத்திற்கு அடுத்தபடியாக நகரமயமாகி வரும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் கிராமங்கள் மடிந்துக் கொண்டிருக்கின்றன.
கிராமப் பொருளாதாரத்தின் அடிப்படையான விவசாயம் மடிந்து கொண்டிருக்கிறது. விவசாய வேலைவாய்ப்பு வீழ்ச்சி அடைந்து விட்டதா? விவசாயத் தொழில் உருக்குலைப்பட்டதா? அங்க வாழ முடியாது என நகரங்களை நோக்கி குடி பெயர காரணம் மத்திய பாஜக ஆட்சியின் பொருளாதாரக் கொள்கை தான்.
மக்களின் ஒற்றுமையை தடுக்கும் பாஜகவின் விஷமத்தனம் நிறைந்த யுக்தியை முறியடிக்க வர்க்க ஒற்றுமை, வர்க்க பார்வை, வர்க்க சிந்தனை என்ற முறையில் விவசாயிகள், தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும். வாழைநாரில் மலர்களை மாலையாக கட்டுவது போல் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றாக கட்ட வேண்டும். இதற்கு தொழிலாளர் அமைப்பை வலுவாக கட்ட வேண்டும் என சுப்பராயன் எம்.பி. பேசினார்.
கூட்டத்தில், ஏஐடியுசி மாநிலச் செயலர் காசிவிஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட உதவிச் செயலர் பாபு, நகரச் செயலர் சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu