ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு... கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு... கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்..
X

கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக, சட்டப்பேரைவயில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, பேரறிவாளன் மட்டும் கடந்த மே மாதம் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு தமிழக அரசு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பேரறிவாளைன் போல மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்பட 6 பேரையும் விடுதலை செய்வதாக உச்சநீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வரவேற்பு தெரிவித்த போதிலும், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் மூலமாக பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் தூக்கிலிட வேண்டும், ராஜீவ் காந்தியுடன் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் நிவாரண வழங்க வேண்டும், காயமடைந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு தலா 2 கோடி ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 3 பேர் இன்ரு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவரும் , வழக்கறிஞருமான அய்யலுசாமி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டும், கழுத்தில் தூக்கு கயிற்றை மாற்றிக் கொண்டும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மூவரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!