தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பகுதியில் சுமார் 20.000 ஏக்கரில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. வாழை விவசாயத்திற்கு உரிய தண்ணீரை பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விவசாயிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகால் மற்றும் தென்கால் பாசன பகுதிகளுக்கு சுமார் 250 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என உறுதி அளித்தனராம். இதனால், விவசாயிகள் தண்ணீர் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தபடி தண்ணீர் திறந்து விடப்படாததால் வாழைகள் கருகும் நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தண்ணீர் திறந்து விடாத பொதுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கருகும் நிலையில் உள்ள வாழை பயிர்களை பாதுகாக்க உடனடியாக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், உறுதி அளித்தப்படி தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் புவிராஜ் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu