ஏமாற்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள்

ஏமாற்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ரயில் பயணிகள்
X

கோப்புப்படம் 

ஒப்புதல் அளித்து பல மாதங்களாகியும் பாலருவி, மேட்டுப்பாளையம் ரயில்கள் இயக்கப்படவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது

பாலக்காடு - திருநெல்வேலி இடையே பயணிக்கும் பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை.

இதுபோல தூத்துக்குடி - கோவை இணைப்பு ரயிலுக்கு பதிலாக தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ரயிலும் இதுவரை இயக்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வந்த போது இந்த ரயில்களை தொடங்கி வைப்பார் என பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை.

பயணிகள் ரயில் - பாலருவி எக்ஸ்பிரஸ் - புனலூர் மற்றும் பாலக்காடு இடையே தினமும் 351 கிலோமீட்டர் தூரம் இயக்கப்படும். பாலக்காடு - திருநெல்வேலி இடையே தினமும் இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்த ரயிலுக்கான எண்கள் மற்றும் கால அட்டவணை அறிவிக்கப்பட்டது. சுமார் 4 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதால் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை இந்த ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்படவில்லை.

இதேபோல் கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி - கோவை இணைப்பு ரயிலுக்கு மாற்றாக தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே வாரம் மூன்று நாள் புதிய ரயில் இயக்க மத்திய ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த ரயில் இதுவரை இயக்கப்படவில்லை. இதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட சில ரயில்கள் இயக்கப்பட்டு விட்ட நிலையில் தூத்துக்குடிக்கான பாலருவி ரயில் நீட்டிப்பு மற்றும் மேட்டுப்பாளையம் புதிய ரயில் ஆகியவை மட்டும் இன்னும் நடைமுறைக்கு வராதது தூத்துக்குடி மாவட்ட பயணிகளை மிகுந்த ஏமாற்றமடைய செய்துள்ளது.

Tags

Next Story