முதல்வர் தமிழ்நாட்டை அடமானம் வைத்து விட்டார் -ஸ்டாலின்
தமிழ்நாட்டையே அடமானம் வைத்து பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என திமுக தலைவர் ஸ்டாலின் கோவில்பட்டியில் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி – எட்டயபுரம் சாலை – கலைஞர் திடலில் நடைபெற்ற, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரடியாகவும் குறைகளைக் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சிக்கு வந்து பொறுப்பேற்ற நாளிலிருந்து 100 நாட்களில் உங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றியே தீருவேன். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நான் தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று சொல்லும் நிலை தான் இருந்தது. எதுவும் தெரியாதது போல பாவலா செய்து கொண்டிருந்தார். தமிழக முதல்வர் நேரடியாக வந்து பார்க்கவில்லை. அதற்காக வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி அந்தக் கொடுமைக்கு இதுவரையில் வருத்தம் தெரிவிக்கவில்லை.
இன்னும் 3 மாதங்கள் தான் இருக்கிறது. இருக்கிறவரையில் கொள்ளை அடித்து விட்டு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் தான் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் இருக்க வேண்டிய இடம் கோட்டை இல்லை, புழல் சிறையில் தான் இருக்கப் போகிறீர்கள். அதுதான் உண்மை. அதுதான் நடக்கப்போகிறது.என்னை யாரும் விலை கொடுத்து வாங்கவும் முடியாது. அடிமைப்படுத்தவும் முடியாது என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். இதை அவர் டெல்லி போனாரே அங்கு போய் சொல்லி இருந்தால் பாராட்டலாம். அல்லது 14-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறாரே! அந்த மேடையில் சொல்வதற்கு பழனிசாமி தயாரா?
தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, பாஜகவின் பாதம் தாங்கிக் கிடக்கும் பழனிசாமிக்கு இது போன்ற வாய்ச்சவடால் வசனங்களை பேசுவதற்கு உரிமை இல்லை. இன்னும் மூன்றே மாதத்தில் பழனிசாமியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். அதன் பிறகு அமையும் அரசு தான், உண்மையான அரசாக அமையும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu