தூத்துக்குடி மக்ரூன் தோன்றிய வரலாறு..!
தூத்துக்குடி மக்ரூன்
திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, காரைக்குடி சீப்பு சீடை, மணப்பாறை முறுக்கு, கோவில்பட்டி கடலை மிட்டாய் என ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு அடையாளமாகத் திகழ்கிறது. வெண்மை நிறத்தில் சிறிய பிரமிடு வடிவத்தில் அமைந்த ஒரு வித்தியாசமான இனிப்பு மக்ரூன் என்று அழைக்கப்படுகிறது. மக்ரூன் என்பது ஒரு போர்த்துக்கீசியச் சொல். இது முதன்முதலில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் அறிமுகமானதால் இது ‘தூத்துக்குடி மக்ரூன்’ என்று அழைக்கப்படுகிறது. தற்போது தூத்துக்குடியில் பல பேக்கரிகள் மக்ரூன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. தூத்துக்குடிக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகள் மூலமாக மக்ரூன்கள் தூத்துக்குடிக்கு அறிமுகமாயின என்று கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் மக்ரூனை தயாரித்து விற்பனை செய்து அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்தியவர் அருணாசலம் பிள்ளை என்பவர். தூத்துக்குடி மாவட்டத்தில் சின்ன நட்டாத்தி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்த போது அங்கிருந்த ஒரு போர்த்துகீசியரிடமிந்து மக்ரூன் தயாரிப்பினைக் கற்று அதை தூத்துக்குடியில் அறிமுகம் செய்தார் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் புகழ்பெறத் தொடங்கிய மக்ரூன் பின்னர் தமிழ்நாடெங்கும் பரவியது.
முட்டையின் வெள்ளைக்கரு, பெரிய முழு முந்திரிப்பருப்பு, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கபடுவது இந்த மக்ரூன். முட்டை வெள்ளைக்கருவுடன் சிறிது மஞ்சள் கரு கலந்து விட்டாலோ அல்லது முந்திரிப்பருப்பின் தரம் குறைந்தாலோ மக்ரூனின் சுவையே மாறிவிடும். எனவே, இந்த மூலப்பொருட்களை கவனமாகக் கையாண்டு மக்ரூன் தயாரிக்கப்படுகிறது.
இனி, மக்ரூன் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்று பார்ப்போம்.
கோழி முட்டையை உடைத்து வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பிளெண்டர் கொன்டு நன்றாக அடிக்க வேண்டும். நுரை போன்று ஆனவுடன் அதனுடன் சர்க்கரை மற்றும் இடித்துத் தூளாக்கப்பட்ட முந்திரி பவுடரைச் சேர்த்து மீண்டும் நன்றாக பிளெண்டர் மூலம் அடிக்க வேண்டும். நன்றாக அடித்ததும் மாவு பதத்திற்கு வரும். ஒரு காகிதத்தை கூம்பு வடிவத்தில் மடித்து அதற்குள் மக்ரூன் மாவை ஊற்றி பொட்டலத்தின் மேற்பகுதியை மூடி கூம்புப்பகுதியை சிறிது கத்தரித்து ஒரு தட்டின் மீது கூம்பு வடிவத்தில் மக்ரூனைப் பிழிய வேண்டும். பேக்கரி அடுப்பில் வைத்து சுமார் நான்கு மணி நேரம் மிதமான சூட்டில் வேக வைத்து பின்னர் எடுக்க வேண்டும். இப்போது மக்ரூன் ரெடி.
இனிப்புப் பண்டமான மக்ரூன் மொறுமொறுப்பாக இருக்கும். கூம்பு வடிவில் வெண்மை நிறத்தில் உள்ள ஒரு மக்ரூனை எடுத்து வாயில் போட்டு கடித்துத் தின்றால் அதன் சுவை நம்மை அடிமையாக்கிவிடும். முழு பாக்கெட் மக்ரூனும் மளமளவென காணாமல் போகும். மக்ரூனை வாங்கிய உடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையென்றால் காற்று புகாமல் வைத்துப் பாதுகாக்க வேண்டும். காற்று கலந்து விட்டால் மக்ரூன் இறுகி அதன் மொறுமொறுப்புத் தன்மையை இழந்து விடும். இதன் பின் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்காது. காற்று புகாத டப்பாக்களில் வைத்தால் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் சுவை மாறாமல் இருக்கும் என்று கூறுகின்றனர்.
தற்போது தூத்துக்குடி மட்டுமின்றி, சென்னை, திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்செந்தூர் முதலான பகுதிகளிலும் மக்ரூனைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். ஆனால், இன்று வரை தூத்துக்குடி மக்ரூனின் சுவை தனிச்சிறப்புடன் திகழ்கிறது. ஒரு பாக்கெட்டை வாங்கி ஒரு மக்ரூனை எடுத்து வாயில் போட்டால் அதன் சுவை நம்மை பிரமிக்க வைக்கும். முழு பாக்கெட் மக்ரூனையும் தின்று தீர்த்த பின்னரே உங்கள் கவனம் வேறு திசைக்குத் திரும்பும். அவ்வளவு அபார சுவை உடையது தூத்துக்குடி மக்ரூருன். தூத்துக்குடி சென்றால் மறக்காமல் மக்ரூனை வாங்கி சாப்பிட்டு மகிழுங்கள். உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாங்கி வந்து பரிசளியுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu