திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
திருவாரூரில் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் ஆய்வு செய்தனர்.
திருவாரூரில் நாளை நடைபெற உள்ள தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடுகளை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டமானது நாளை (15.03.2022) காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து தொடங்கி வைக்கப்படுகிறது. 96 அடி உயரம், 300 டன் எடையுடன் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேர் அலங்கரிக்கப்படுகிறது.
இத்தேரோடத்தினையொட்டி துறைவாரியாக பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காவல்துறை பொருத்தமட்டில் 4 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நகராட்சி சார்பில் 270 பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளனர். பொது மக்கள் பயன்பாட்டிற்காக 6 இடங்களில் 12 பிரிவுகளாக கழிவறை வசதிகளும், 6 இடங்களில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய் துறையின் சார்பில் 4 வட்டாட்சியர்களும், 9 வருவாய் துறை பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தீயணைப்புத்துறையினர் தேர் வீதிகளில் வரும்போது தேருக்கு பின்னால், அனைத்து வசதிகள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய தீயணைப்பு வண்டி, ஒன்றினை தேரினை தொடர்ந்து வர செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறையின் சார்பில் 13 உதவி மருத்துவர்கள் 6 சுகாதார ஆய்வாளர், 2 வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன் மற்றும் அரசுதுறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu