உளுந்து சாகுபடி குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கூத்தாநல்லூர் அருகே வேளுக்குடி கிராமத்தில் வரப்பில் சாகுபடி செய்த உளுந்து பயிரை ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டார்
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் சம்பா, தாளடி 1,47,285 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், வரப்பு உளுந்து சாகுபடியினை பொறுத்தவரை கடந்த ஆண்டில் 5,830 ஹெக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 8,382 ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இரண்டு மடங்கு கூடுதல் சாதனையாகும். வரப்பு உளுந்து சாகுபடி செய்யும் போது விவசாயிகளுக்கு நெற்பயிருடன் கூடுதல் வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்யப்படும்போது நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் பொறிப்பயிராக செயல்பட்டு நெற்பயிரினை தாக்கும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், வரப்பு உளுந்து சாகுபடி செய்யும்போது நெற்பயிருக்கு பாய்ச்சும் நீரில் சிறிதளவு எடுத்துக்கொண்டு வரப்பு உளுந்து மூலம் ஒரு ஹெக்டருக்கு 100-150 கிலோ மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் வரப்பு பயிரினை தீவிரமாக சாகுபடி செய்து வருகின்றனர். எனவே, அனைத்து விவசாயிகளும் வரப்பு பயிராக உளுந்தினை சாகுபடி செய்து பயனடையுமாறு என்றார் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்.
இந்நிகழ்வில் வேளாண் துறையின் இணை இயக்குநர் சிவகுமார், வேளாண் துறையின் துணை இயக்குநர்கள் உத்திராபதி, ரவீந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா உள்ளிட்ட வேளாண்மைதுறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu