திருவாரூர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
திருவாரூரில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட காப்பனாமங்கலம், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினையும், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஆண்டிப்பாளையம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவையினையும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் தமிழகம் முழுவதும் இன்றைய தினம் ஆறாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் 66 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை கையிருப்பாக கொண்டு நடத்தப்பட்டது.அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 50,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை இலக்காக நிர்ணயத்து இன்றைய தினம் 500 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் வருகைதந்த போது சுகாதாரத்துறையின் கீழ் உள்ள துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டியும், புதிய கட்டிடங்கள் வேண்டியும் கோரிக்கை அளிக்கப்பட்ட நிலையில் இம்மாவட்டத்திலுள்ள 19 துணை சுகாதார நிலையங்களை சீரமைத்தல் புதிய கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பணிகளுக்கு தலா ரூபாய் 30 இலட்சம் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த நிதி ஆண்டிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அத்தோடு மட்டுமல்லாது திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூபாய் 41 இலட்சமும், திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வாங்குவதற்கு ரூபாய் 80 இலட்சமும் மற்றும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்காக ரூபாய் 9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதுபோன்று மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் தொடர் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளில் இன்றுவரை குறையாத நிலையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் கொரோனா நோய்த்தொற்று மிகவேகமாக குறைந்துள்ளது. பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் கட்டாயம் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu