சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை இரவில் விரட்டிப் பிடித்த ஊழியர்கள்
முத்துப்பேட்டை பேரூராட்சியில் சாலையில் திரியும் மாடுகள்
முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் நிமித்தமாகவும், அன்றாட தேவைகளுக்காகவும் தினமும் வெளியே சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக நகரின் முக்கிய வீதிகளில் மாடுகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது.
இதனால் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இபுறாஹீமை சந்தித்து பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இதன் எதிரொலியாக முகமது இபுறாஹீம் தலைமையில், கவுன்சிலர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி சாலை ரெயில்வே கேட் தொடங்கி குமரன் பஜார், பழைய போஸ்ட் ஆபீஸ் தெரு, பழைய பஸ் ஸ்டாண்ட், பங்களா வாசல், பெரிய கடை தெரு, கருமாரியம்மன் கோவில் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகளை துப்புரவு பணியாளர்களை கொண்டு விரட்டி, விரட்டி பிடித்தனர். இரவு 9 மணி தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை மாடுகளை பிடித்தனர். மொத்தமாக 46 மாடுகள் பிடிக்கப்பட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாட்டர் டேங் அருகில் உள்ள வளாகத்தில் அடைக்கப்பட்டது.
இதுகுறித்து செயல் அலுவலர் முகம்மது இபுராஹிம் கூறுகையில்:பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களிடம் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்கப்பட்டு மாடுகள் ஒப்படைக்கப்படும். அவ்வாறு உரிமையாளர் பெற்றுக்கொள்ளாத மாடுகளை மயிலாடுதுறை அருகே உள்ள கோசாலையில் ஒப்படைக்கபடும் என்றார்.நள்ளிரவு வரை பேரூராட்சி நிர்வாகத்தினர் மாடுகளை விரட்டி, விரட்டி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu