தம்பியை தாக்கியவரை விசாரிக்க சென்ற அண்ணனுக்கு கத்தி குத்து

தம்பியை தாக்கியவரை விசாரிக்கச் சென்ற அண்ணனுக்கு கத்தி குத்து விழுந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக 8 பேரை நன்னிலம் போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பண்ணை விளாகம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்று பன்னீர்செல்வத்தின் இளைய மகன் அரவிந்த் தியாகராஜ புரத்தை சார்ந்த அப்பு என்கின்ற ராஜேஷ் என்பவருடைய தந்தைக்கு மது வாங்கி கொடுத்ததாகவும், அதனை ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரவிந்த்திடம் ஏன், என் அப்பாவிற்கு மது வாங்கிக் கொடுத்தாய் என கேட்டதாகவும் தெரிகிறது.

அந்த நேரத்தில் அரவிந்தற்கும் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது தகவலறிந்த அரவிந்த்தின் அண்ணன் அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அரவிந்தை கத்தியால் தாக்க முற்பட்டபோது அதனை தடுக்க முயன்ற அமல்ராஜிக்கு கத்திக்குத்து விழுந்தது.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த அமல்ராஜ் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திருவாரூர் மருத்துவமனை மருத்துவர்கள், அமல்ராஜை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கத்திக்குத்தின் காரணமாக அமல்ராஜின் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமல்ராஜ் தற்போது தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தியாகராஜ புரத்தை சேர்ந்த அப்பு என்ற ராஜேஷ், மௌலி, அறிவானந்தம், சிலம்பரசன், கலைமணி, மதியழகன், நிலவழகன், அபிஷேக் ஆகிய எட்டு நபர்களை நன்னிலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story