கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை
திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பின் மாவட்டத் தலைவர் ஸ்ரீவாஞ்சியம் ஈஎம்ஏ. ரஹீம், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தேர்தல் ஆணையர் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் ஆகியோருக்குச் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
தமிழகத்தில் தற்போது கிராமப் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் தமிழக அரசின் நடவடிக்கைகள், சென்ற ஆண்டு போல் இல்லாமல், மிகவும் தொய்வுடன் காணப்டுவதாகப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது.
குறிப்பாக, கரோனாத் தொற்றுப் பாதித்தவர்கள், தற்போது வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குடும்பத்தினர்கள், வெளியிடங்களுக்குத் சென்று, தங்களது அன்றாடப் பணிகளைக் கவனித்து வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களோடு நெருங்கிய தொடர்புள்ளவர்கள் பாதிப்பின் தீவிரத்தை உணராமல், வெளியில் செல்வதன் காரணமாக, பொதுமக்களிடையே வெகு வேகமாக தொற்றுப் பரவி வருகிறது.
சென்ற ஆண்டு, சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக, கொரோனா தொற்று முன் தடுப்பு நடவடிக்கையாகப் பரிசோதனைகளும், தூய்மைப் பணிகளும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஆனால் தற்போது, முன் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் மெத்தனமாக நடைபெறுவது, பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக அரசு அதிகாரிகள் விரைவில் கூடி முடிவெடுத்து, சென்ற ஆண்டு தொற்று காலத்தில் அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள், வழங்கப்பட்ட உணவு, எடுக்கப்பட்ட முன் தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவற்றைத் தீவிரப்படுத்துவதன் மூலமே, தொற்றின் இரண்டாவது அலை மூலம் ஏற்படும் பாதிப்பினை ஓரளவு குறைக்க முடியும். எனவே அரசு அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தை அணுகி அனுமதிப் பெற்று, பழைய நடைமுறைகளைத் தீவிரப்படுத்திட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu