திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?

திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
X

பொறியாளர் நாகேஷ் மற்றும் அவருடைய இரு மகள்கள் நித்தியானந்தருடன் , பழைய படம்

திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம் பெண் பாதாள அறையில் அடைக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது.

திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா¸ தனது தியான பீடத்தை கனடா உள்பட 50 நாடுகளில் நிறுவியுள்ளார். இதன் தலைமை இடம் பெங்களுருவில் உள்ள பிடதியில் உள்ளது. தன் மீது உள்ள வழக்கு மற்றும் பல்வேறு பிரச்சனைகளுக்காக நாட்டை விட்டு வெளியேறிய அவர் தென் அமெரிக்கா பகுதியில் தனி தீவை விலைக்கு வாங்கி கைலாசா எனும் நாட்டை நிறுவி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் ஆன்லைனில் தோன்றாததால் அவர் எங்கே சென்றார் என்ற விவாதம் எழுந்தது. அதற்கு நித்யானந்தா¸ தனக்கு ஏகப்பட்ட டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. இதனையடுத்து உலக நன்மைக்காக தான் சமாதி நிலையில் இருப்பதாகவும்¸ விரைவில் சத்சங்கம் நடத்துவேன் எனவும் தன் உடல்நிலை குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் தனது அதிகார பூர்வ இணைய தள பக்கத்தில் நித்யானந்தா பதிவிட்டிருந்தார்.

இதேபோல் நித்யானந்தா ஆசிரமங்களில் பல பக்தர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இல்லற வாழ்க்கையை துறந்து பலர் துறவிகளாக உள்ளனர். இதில் இளம்பெண்களும் அடங்குவர்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீநாகேஷ் மற்றும் அவரது மனைவி ஓய்வு பெற்ற பேராசிரியர் மாலா ஆகியோரது மூத்த மகள் வைஷ்ணவி(24); இளைய மகள் வர்தினி(22). இவர்கள் அனைவருமே கடந்த பல ஆண்டுகளாக நித்யானந்தாவின் சீடர்களாக இருந்து கர்நாடகாவின் பிடதி ஆசிரமத்தில் பல்வேறு பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களால் ஸ்ரீநாகேஷ் அவரது மனைவி மாலா மற்றும் மூத்த மகள் வைஷ்ணவி ஆகியோர் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர். இவர்களது இளைய மகள் வர்தினி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி தொடர்ந்து நித்யானந்தாவின் சீடராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் தனது மகளை பார்க்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்காத நிலையில் செய்வதறியாமல் இரண்டு ஆண்டுகளாக தவித்து வந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தனர். அதன் அடிப்படையில் கர்நாடக காவல் துறையினர் பிடதி ஆசிரமத்தில் தேடியபோது அவரது மகள் வர்தினி அங்கு இல்லை என்று கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநாகேஷ் குடும்பத்தினர் தனது மகள் திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்டு இருப்பாரோ? என்று கருதி திருவண்ணாமலை நித்தியானந்தா நேற்றிரவு ஆசிரமத்திற்கு வந்தனர். ஆனால் அவர்களை ஆசிரம நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்காமல் அலைக்கழித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீ நாகேஷ் குடும்பத்தினர் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து கர்நாடக போலீசார் தகவல்படி திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ. சுமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் நேற்றிரவு திருவண்ணாமலையில் உள்ள ஆசிரமத்தில் சோதனையிட சென்றனர்.

அவர்களுடன் இளம்பெண்ணின் பெற்றோரும் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க சீடர்கள் மறுத்தனர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரவு 9 மணி முதல் 10 மணி வரை சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் இளம்பெண் குறித்த தகவல் கிடைக்கவில்லை. ஆனால் ஆசிரமத்திற்குள் பாதாள அறைகள் உள்ளது. அதனை திறக்கும்படி போலீசார் கூறினர். அதற்கு, 'அறைகளின் சாவி தங்களிடம் இல்லை. தலைமை ஆசிரம நிர்வாகிகளிடம் உள்ளது, பாதாள அறைகளில் மின்விளக்கு வசதி இல்லை' என ஆசிரம பணியாளர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த பாதாள அறைகளில் எங்காவது இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனவே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!