திருவண்ணாமலை: ஒரே இரவில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.85 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை: ஒரே இரவில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.85 லட்சம் கொள்ளை
X

கொள்ளையர்களால் சேதப்படுத்தப்பட்ட ஏ.டி.எம். எந்திரம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.85 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய 4 இடங்களில் நள்ளிரவில் பாரத ஸ்டேட் வங்கி, ஒன்இந்தியா வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.85 லட்சம் வரை பணம் கொள்ளயடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இதனால் இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மேலும், உள்ளூர் மக்களின் பயன்பாடு போன்ற செயல்களால் எப்போதும் திருவண்ணாமலை பரபரப்பாகவே இருக்கும்.

திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய 4 இடங்களில் நள்ளிரவில் பாரத ஸ்டேட் வங்கி, ஒன்இந்தியா வங்கி ஏ.டி.எம்.களில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.75 லட்சம் வரை பணம் கொள்ளயடிக்கப்பட்டாத கூறப்படுகிறது.

அடையாளம் தெரியாத நபர்கள் ஏ.டி.எம். மையத்தின் உள்ளே சென்று ஷட்டரை மூடிவிட்டு கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை எடுத்துள்ளனர். கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக ஏ.டி.எம். எந்திரம் மற்றும் சி.சி.டி.வி. உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்துவிட்டு சென்றுள்ளனர்.

ஒரே நாளில் நான்கு ஏ.டி.எம். மையத்திலும் கொள்ளை நடந்துள்ளது. குறிப்பாக சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்தி அழித்துள்ளது தெரியவந்துள்ளது.

கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார்

இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'ஒன் இந்தியா ஏ.டி.எம். ஆகும். இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது.

திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் நள்ளிரவு முதலே விசாரணையை தொடங்கிவிட்டனர்.

அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் தமிழக ஆந்திர எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வழியாக செல்லும் ஆந்திர பதிவின் கொண்ட வாகனம் மட்டுமின்றி அனைத்து வாகனங்களையும், இருசக்கர வாகனம் லாரி பேருந்து கார் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாநகருக்கு உட்பட்ட தங்கும் விடுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 3:30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில், கொள்ளையர்களின் வாகனம் தென்பட்டதாகவும், அது ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதற்குப் பிறகு அந்த வாகனத்தின் வழித்தடம் தெரியாத நிலையில் அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சி.சி.டி.வி. காட்சிகளையும் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 28 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களின் வாகனம் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக ஆந்திர எல்லையை கொண்ட வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா திருவண்ணாமலை எல்லையில் உள்ள சுங்கச்சாவடி மையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்.

நள்ளிரவில் நான்கு ஏ.டி.எம். மையங்களை குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்-ஐ குறி வைத்து கொள்ளையடித்த சம்பவம் எதிரொலியாக வேலூர் சரக டி.ஐ.ஜி .முத்துசாமி திருவண்ணாமலைக்கு வருகை தந்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

காவல்துறை நடத்திய விசாரணையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்றும் திருவண்ணாமலை நகரில் உள்ள சி.சி. டி.வி .கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாரியம்மன் கோவில் தெரு, தேனி மலையில் இருந்து வேலூர் ரோடு முழுவதும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளையர்கள் கொள்ளையடித்த மொத்த பணம் மாரியம்மன் கோவில் தெரு எஸ் பி ஐ ஏ டி எம் சுமார் ரூ. 32 லட்சம், தேனிமலை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். சுமார் ரூ. 30 லட்சம், போளூர் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். சுமார் ரூ. 20 லட்சம், கலசப்பாக்கம் இந்தியா ஒன் ஏ.டி.எம். ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ. 86 லட்சம் வரை கொள்ளையர்கள் கொள்ளை அடித்து இருப்பார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரே இரவில் 4 ஏ.டி.எம். மையங்களில் கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து லட்சக்கணக்கான ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
AI கருவிகள் மூலம் மார்க்கெட் கணிப்புகளை இன்னும் தெளிவாக்குங்கள்!