Thirunelveli sodhikkulambu-'திருநெல்வேலி சொதிக்குழம்பு' தெரியுமா..?

Thirunelveli sodhikkulambu-திருநெல்வேலி சொதிக்குழம்பு தெரியுமா..?
X

Thirunelveli sodhikkulambu-திருநெல்வேலி சொதிக்குழம்பு (கோப்பு படம்)

திருநெல்வேலி, பேச்சின் சிறப்பை போலவே மண்ணின் மணம் ததும்பும் சில பாரம்பர்ய சமாச்சாரங்களும் உள்ளன.

Thirunelveli sodhikkulambu

திருநெல்வேலிக்காரர்கள் போஜனப்பிரியர்கள் என்றே சொல்ல வேண்டும். "தின்னு தீர்த்தே சொத்தை இழந்தவன் திருநெவேலிக்காரன்" என்று சொல்வார்கள்.( இது எல்லோருக்கும் பொதுவானது என்று சொல்லமுடியாது. ஒரு வேடிக்கையாக இப்படி சொல்வார்கள் )

திருநெல்வேலி டவுண் காந்தி சிலை அருகே ஒரு காலத்தில் இருந்த போத்தி ஹோட்டல் பற்றி கதை கதையாக சொல்வார்கள் பெரியவர்கள்.


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீடுகளில் சமைக்கும் " கூட்டாஞ்சோறு " ரொம்ப பிரபல்யமானது. எல்லாக்காய்களையும் சேர்த்துப்போட்டு சமைக்கும் இந்த உணவு நல்ல ருசியானதும்கூட. (வெஜிடபிள் பிரியாணிக்கும் கூட்டாஞ்சோறுக்கும் வித்தியாசம் உண்டு.)

Thirunelveli sodhikkulambu

கூட்டாஞ்சோறுக்கு " தொட்டுக்கிட" கூழ்வற்றல், வெங்காய வடகம், சீனியவரக்கா வத்தல், கல்லிடைக்குறிச்சி அப்பளம்..என்று ஏகப்பட்ட டிஸ்கள் உண்டு. இதைப்போல, தேங்காய்ப்பாலில் செய்யும் " சொதிக்குழம்பு" பிரபலம். அதிக காரம் இல்லாத இந்த குழம்பு வகை, தென்னை அதிகம் விளையும் இலங்கையில் இருந்து வந்தது என்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், கல்யாணத்திற்கு மறுநாள் சொதிச்சாப்பாடு போடுவது மரபு.

" மாப்ளெ..அந்தானைக்கு கிளம்பீராதீரும்..இருந்து நாளைக்கு மறுவீட்டு சொதிச்சாப்பாட்டை சாப்பிட்டு போங்க.." என்று உரிமையோடு சொதியின் ருசிக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என்றால் பார்த்துக்கோங்களேன்.

சொதிக்கு உருளைக்கிழங்கு பொரியலும், இஞ்சி பச்சடியும் உற்ற துணை.


சொதிக்குழம்பு செய்வதற்கு நல்ல அனுபவம் வேண்டும். தண்ணீர் கொஞ்சம் அதிகமானாலும் சொதப்பி விடும். தேங்காய்ப்பால் கெட்டியாக இருக்க வேண்டும். அதில், முருங்கைக்காய், அவரைக்காய், காரட் போன்ற காய்களைப்போடுவார்கள். சொதிக்குழம்போடு சேர்த்து சாப்பிட முன்பு குறிப்பிட்ட அப்பளம், கூழ்வத்தல் வகையறாக்களும் கட்டாயத்தேவை.

மாவட்டத்தின் கறி வகைகளுள் முக்கியமானது அவியல். வாழைக்காய்,கத்தரிக்காய்,அவரைக்காய் போட்டு செய்வது. இவர்களின் உணவில் அன்றாடம் சேர்க்கும் மற்றொன்று அரைக்கீரை.


Thirunelveli sodhikkulambu

அரைக்கீரை செய்யும் நாளில் பெரும்பாலும் புளிக்குழம்பு உண்டு. இரண்டையும் கலந்து சாப்பிடும் வழக்கமும் இருக்கிறது. இரவு மீதமுள்ள அவியல்,குழம்பு,கீரை போன்றவற்றை மண் சட்டியில் போட்டு கிண்டி " பழங்கறி " செய்வார்கள் . நன்றாக சுண்ட வைப்பதால், " சுண்டைக்கறி " என்றும் சொல்லப்படுவதுண்டு.

" சுண்டைக் கறியின் சுவையறியார்

அறியார் பண்டைத்தமிழ்ப் பெருமை"

என்று திருநெல்வேலிக்காரன் பாட்டை வேறு எழுதி வச்சிருக்காம்னா பார்த்துக்குங்க. திருநெல்வேலிக்கேன்றே ஒரு தனி நளபாகம் உண்டுங்கறேன்.

திருநெல்வேலி சோதிக்குழம்பு செய்வது எப்படின்னு பார்ப்போமா?

கேரட் – 2, பீன்ஸ் – 10, மீடியம் சைஸில் உருளைக்கிழங்கு – 1, முருங்கைக்காய் – 1 இந்த காய்கறிகளை எல்லாம் அவியலுக்கு வெட்டுவது போல கொஞ்சம் பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெட்டிய இந்த காய்கறிகளுடன் ஒரு கைப்பிடி அளவு பச்சை பட்டாணியை போட்டு முக்கால் பாகம் வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வேக வைத்த காய்கறிகள் அப்படியே இருக்கட்டும்.

2 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து மசித்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

ஒரு தேங்காயை உடைத்து துருவி அந்த தேங்காயிலிருந்து தேங்காய்ப் பால் எடுக்க வேண்டும். முதலில் எடுத்த தேங்காய் பால் திக்காக இருக்கும். 250ml திக்கான தேங்காய்ப்பால் முதலில் எடுத்து தனியாக வைத்து விடுங்கள். அதன் பின்பு இரண்டாவதாக எடுக்கப்படும் தேங்காய்ப்பாலை 500ml அளவு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

கொஞ்சம் பெரிய துண்டு இஞ்சி, பச்சைமிளகாய் 4 அல்லது 5 உங்க காரத்திற்கு ஏற்ப இந்த பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்துக்கொள்ளுங்கள். இதையும் அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (இந்த குழம்புக்கு இஞ்சி பச்சை மிளகாய் வாசம் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும்.)


இப்போது சொதி குழம்பு தாளிக்கச் செல்லலாம் வாங்க

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் தோலுரித்து – 10 பல், இந்த பொருட்களை சேர்த்து வெங்காயம் நன்றாக வதங்கும் வரை அடுப்பில் விட வேண்டும்.

வெங்காயம் சிவப்பு நிறத்தில் கண்ணாடிபோல மினுமினுன்னு வதங்கி வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பச்சை மிளகாய் விழுதை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள் பொடி – 1/4 ஸ்பூன், சேர்த்து வேக வைத்த காய்கறிகளை போட்டு 1 நிமிடம் எண்ணெயில் வதக்கி விட்டு, இரண்டாவதாக எடுத்த கொஞ்சம் தண்ணீராக இருக்கக்கூடிய தேங்காய்ப்பால் 500ml கடாயில் ஊற்றி, 5 நிமிடம் போல நன்றாக கொதிக்கவிடுங்கள்.

தேங்காய் பால் கொதித்து சுண்டி வரும்போது வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பை எடுத்து கடாயில் ஊற்றுங்கள். அடுத்த படியாக குழம்புக்கு தேவையான அளவு உப்பை போட்டு, குழம்பை நன்றாக கலந்து விட்டு, 2 நிமிடம் கொதிக்க விட்டு, இறுதியாக திக்காக இருக்கும் தேங்காய் பாலை ஊற்றி இலேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு, 1/2 ஸ்பூன் அளவு எலுமிச்சை பழச்சாறை ஊற்றி, கொத்தமல்லி தழைகளைத் தூவி, கலந்து பரிமாறினால் சூப்பரான திருநெல்வேலி ஸ்டைல் சொதி குழம்பு தயார். தேங்காய்ப்பால் ஊற்றி ரொம்பநேரம் கொதிக்கவைக்கவேண்டாம்.

உங்க வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.ஆனா ஒரு விஷயத்தைமட்டும் நான் சொல்லிடறேன். தயவு செஞ்சு உங்க மாப்பிள்ளை வந்திருக்கும்போது சொதிக்குழம்பை செய்திடாதீங்க. அப்புறம் உங்க மாப்பிள்ளை சோதிக்குழம்புக்காகவே மாமியார் வீட்டிலேயே தங்கிடப்போறார்.

( அப்புறம் இன்னொரு விஷயம். நான் சொன்னேன்னு உங்க மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிடாதீங்க)

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!