முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை இல்லை - மத்திய இணையமைச்சர் உறுதி!
முல்லைப்பெரியாறு அணை ( கோப்பு படம்)
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடாளுமன்ற மக்களவையில் நடந்த முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதத்தின் ஒரு பகுதியை மேற்கோளாக காட்டும், காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள், கடைசியாக அவர் சொன்ன வரிகளான 152 அடி தண்ணீர் தேக்குவதற்கு வாய்ப்பில்லை என்கிற வரியை மட்டும் கண்டும் காணாமல் கடந்து போனது, எங்களை போன்றவர்களுக்கு பெருத்த வருத்தம்.
நாடாளுமன்ற மக்களவையில், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டீன் குரியா கோஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, ‘முல்லைப் பெரியாறு அணை பலமாக இருப்பதாகவும், தமிழக நீர்வளத்துறை அதை முறையாக பராமரித்து வருவதாகவும், மத்திய நிபுணர் குழுக்கள் அணை பலமாக இருப்பதாக சொன்னதாலும், புதிய அணை குறித்த பேச்சுக்கு இடமில்லை’ என்று பதிலளித்திருக்கிறார்.
நாடாளுமன்ற அவை குறிப்பில் உள்ள வரிகளின் அடிப்படையில் இந்த செய்தி முதன்மை செய்தியாக இருந்தாலும், கடைசியாக அவர் குறிப்பிட்ட வரிகளான,,, ஆனாலும் 152 அடி உயரத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்க முடியாது என்பதை, ஒரே வரியில் சுருக்கமாக, அதுவும் கடைசியாக எழுதி முடித்து விட்டோம்.
ஆனால் அதுதான் முதல் வரியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். அணை பலமாக இருக்கிறது, நிபுணர் குழுக்கள் தொடர்ந்து ஆய்வு செய்கிறது, தமிழகம் அணையை முழுமையாக பராமரிக்கிறது, எல்லாம் சரிதான், பிறகு என்ன தேவைக்காக அணையில் 152 அடி தண்ணீரை தேக்க முடியாது.
அதுபோல நமது தேனி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன் எழுப்பிய கேள்வியான,,, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் எப்போது 152 அடியாக உயர்த்தப்படும் என்கிற கேள்விக்கு பதில் அளித்த அதே மத்திய ஜல் சக்தி துறை இணை அமைச்சர் சவுத்ரி...அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முடிந்ததும், அதற்குப் பிறகு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
1979 ஆம் ஆண்டு அணையை பலப்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தத்தை இரண்டு மாநில அரசுகளும் மேற்கொண்ட போதே, பலப்படுத்தும் பணிகளின் கால அளவு பத்தாண்டுகள் என்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
பத்தாண்டுகள் காலக்கடி என்பது 45 ஆண்டுகளாக நீண்டு கிடக்கிறது. இதற்கிடையில் இரண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வேறு நமக்கு சாதகமாக இருக்கும் நிலையிலும், ஒப்பந்த காலங்கள் 45 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், இன்னும் அணையை பலப்படுத்த முடியாத கையறு நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.
எனவே அணையினை மீண்டும் பலப்படுத்தி, நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். கேரள அரசியல்வாதிகள் சிலர் தங்கள் பிழைப்பிற்காக செய்யும் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். கட்டாயம் தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தால் இரு மாநில மக்களுக்கும் இடையே மோதல் வராமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கேரள அரசு கொடுத்த பெரியாறு அணை வரைவு திட்டத்தை நிராகரித்து அறிவிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக புதிய அணை என்ற பேச்சே இனி கேரளாவில் எழக்கூடாது. அதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வளவு விஷயங்கள் நடந்த பின்னரும், கேரளா அத்துமீறினால், தேவையற்ற சிக்கல்கள் உருவாகும் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu