தமிழ் விக்கிபீடியாவில் எழுதுங்கள் : எழுத்தாளர் சுப்பிரமணி அழைப்பு..!

தமிழ் விக்கிபீடியாவில் எழுதுங்கள் :  எழுத்தாளர் சுப்பிரமணி அழைப்பு..!
X

தேனியில் நடைபெறும் புத்தகத்திருவிழாவில் எழுத்தாளர் சுப்பிரமணிக்கு மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் பரிசு வழங்கினார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எண்ணிக்கை அதிகரிக்க அனைவரும் எழுத வேண்டும் என எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி பேசினார்.

தேனி, பழனிசெட்டிபட்டியில் நடைபெற்று வரும் தேனி மாவட்ட இரண்டாவது புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகளில் ஒன்றாக இலக்கிய அரங்கம் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட நூலக அலுவலர் இரா. சரவணக்குமார் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்டு பேசிய எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம் குறித்துப் பேசினார்.

அவர் பேசியபோது, விக்கிப்பீடியா என்பது இணையக் கலைக்களஞ்சியம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. விக்கிப்பீடியாவை மாணவர்கள், ஆசிரியர்கள், செய்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு பிரிவினர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.


உலகம் முழுவதுமுள்ள தன்னார்வப் பயனர்களைக் கொண்டு வணிக நோக்கமின்றி 335 மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவும் ஒன்றாக இருக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 868 கட்டுரைகளுடன் இந்திய மொழிகளில் முதலிடத்தில் இருந்தாலும், உலகலாளவிய அளவில் மிகவும் பின் தங்கியிருக்கிறது.

உலக அளவில் மொழிகள் பயன்பாட்டில் 20 ஆம் இடத்திலிருக்கும் தமிழ் மொழி, அனைத்து மொழிகளுக்குமான விக்கிப்பீடியாக்களில் 60 ஆம் இடம் என்று பின் தங்கியிருக்கிறது. தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என்று அனைவரும் கட்டுரைகள் எழுத முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாக கவிஞர் ஞானபாரதி பேசினார்.

இலக்கிய அரங்கம் நிகழ்வில் நாள்தோறும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிகழ்வில் தேனி மு. சுப்பிரமணி, ஞானபாரதி, பாவெல் பாரதி, அல்லிநகரம் தாமோதரன், கூடல் தாரிக், ஜோதிபாரதி, பேராசிரியர் தமிழ்ச்செல்வி ஆகிய எழுத்தாளர்கள் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட மைய நூலகர் சு. முத்துக்குமார் நன்றி தெரிவித்தார். ஆ. விஜயமூர்த்தி, நம்பெருமாள் உள்ளிட்ட நூலகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினைப் புலவர் ச. ந. இளங்குமரன் தொகுத்து வழங்கினார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil