தேனி கலெக்டரிடம் தற்கொலை மிரட்டல் விடும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தேனி கலெக்டரிடம் தற்கொலை மிரட்டல் விடும் பெண்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
X

தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன்(பைல் படம்)

தேனி கலெக்டரிடம் தங்களுக்கு உடனடியாக வேலை தராவிட்டால் இங்கேயே தீக்குளிப்பேன் என சில பெண்கள் மிரட்டுவது தொடர்கிறது

தேனி கலெக்டர் மனம் நொந்து போகும் அளவுக்கு மனு அளிக்க வரும் சில பெண்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர் . கலெக்டரின் இரக்க குணத்தை தவறாக பயன்படுத்தி நெருக்கடி கொடுப்பவர்கள் மீது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேனி கலெக்டர் முரளீதரன் பல ஆண்டுகளாக சென்னை கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தார். தற்போது தேனி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருகிறார். கவர்னர் மாளிகையில் பணிபுரிந்ததால் சென்னையில் உள்ள அத்தனை ஐஏஎஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடனும் மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ளார். தன்னை விட உயர் பதவியில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளிடம் கூட நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களை பெயர் சொல்லி அழைத்து, 'நான் தேனியில் இருநது கலெக்டர் முரளி பேசுறேன். இங்க ஒருவருக்கு இந்த உதவி செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் உதவ முடியுமா?' என மொபைலில் கேட்டு சிலருக்கு சில உதவிகளை செய்து கொடுத்து வருகிறார்.

இதனால் மக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளது. இதனை சிலர் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதுதான் வேதனை. குறிப்பாக தேனி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், நான் பிளஸ் 2 முடித்துள்ளேன். எனக்கு உடனே ஓ.ஏ.வேலை அல்லது வேறு ஏதாவது ஒரு வேலை போட்டுத் தாருங்கள். இல்லையென்றால் நான் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி அடம் பிடித்தார்.

அவரிடம் பேசிய கலெக்டர் மிகவும் பணிவுடன், சகோதரி அரசு வேலை அவ்வளவு எளிதாக கிடைக்காது. நான் தற்போது உன்னை தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விடுகிறேன். ஒரு மூன்று மாதம் சிரமப்பட்டு போட்டித்தேர்வு எழுது. அதற்கு நானே தேவையான உதவிகள் செய்கிறேன். மூன்று மாதம் சிரமப்பட்டு படித்தால் எளிதாக போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம். உனக்கு அரசு வேலை கிடைக்கும். அதுவரை தேவையான வழிகாட்டுதல்கள் அத்தனையும் நான் வழங்குகிறேன் என அறிவுரை கூறினார்.

அதை காது கொடுத்து கேட்காத அந்த பெண், அதெல்லாம் முடியாது, நான் குழந்தைகளை வைத்துக் கொண்டு வேலைக்கு போய்க் கொண்டு படிப்பது முடியாத காரியம். நீங்கள் கலெக்டர் தானே உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, எனக்கு இங்கேயே இப்போதே ஒரு வேலை போட்டுத்தாருங்கள். இல்லையென்றால் கலெக்டர் அலுவலகத்திலேயே நான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார். மனம் நொந்து போன கலெக்டர் அந்த பெண்ணை வெளியில் அனுப்பி வைக்க பெரும்பாடுபட நேரிட்டது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில், கலெக்டருக்கு அலைபேசிக்கு அழைப்பு வந்தது. கலெக்டர் போனை எடுக்கவும், அதில் பேசிய பெண் ஒருவர், 'நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவள். தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கிறேன். நீங்க தானே தேனி கலெக்டர், உடனே முதல்வரிடம் பேசி, எனக்கு அப்பாயின்மென்ட் வாங்கித்தாருங்கள் எனக்கேட்டுள்ளார்.

அப்போதும் பொறுமையாக பதிலளித்த கலெக்டர், சகோதரி, நீங்கள் முதல்வர் தனிப்பிரிவில் உங்கள் குறைகளை எழுதி மனுவாக கொடுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். என்னிடம் விவரம் கேட்பார்கள். நானும் உதவி செய்கிறேன். திடீரென முதல்வரை சந்திப்பது எல்லாம் முடியாத காரியம். நானே நினைத்தாலும் அப்பாயின்மென்ட் வாங்க முடியாது' என விளக்கி உள்ளார். அதற்கு அந்த பெண், நீங்க கலெக்டர் தானே, முதல்வர்கிட்ட என் ஊரை சேர்ந்த பெண் உங்களை பார்க்க சென்னை வந்திருக்காங்க. அவர்களது தேவையை நிறைவேற்றி அனுப்புங்க அப்படீன்னு சொல்லி எனக்கு அப்பாயின்மெண்ட் வாங்கித்தாங்க என மீண்டும் அடம் பிடித்துள்ளார். அப்படி அப்பாயின்மெண்ட் வாங்கித்தராட்டி நடக்க போற வீபரீதத்திற்கு நீங்களே காரணம் எனவும் மிரட்டினாராம். கலெக்டர் அந்த காலை பொழுதிலேயே மனம் நொந்து போனார். இந்த மக்களுக்கு நாம் கீழே இறங்கிப்போய் உதவி செய்வது கூட புரியவில்லை. கலெக்டரால் என்ன செய்ய முடியும்ங்கிறதும் புரியவில்லை. இப்படி படுத்துறாங்களேன்று சக அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிலர் நிருபர்கள் பேசுறேன் அப்படீனு ராத்திரி 11 மணிக்கு போன் பேசி கோரிக்கையை சொல்வது. அதிகாலை 2 மணிக்கு போன் பேசி கோரிக்கையை சொல்வது, ஏன் இப்ப போன் பன்றீங்கனு கேட்டால், பகல்ல தான் நீங்க ஊர் ஊரா சுத்த போயிறீங்க. உங்களை பாக்கவும் முடியல, பேசவும் முடியல அதனால தான் இந்த நேரத்திற்கு போன் செய்கிறோம் என கூறி நெருக்கடி கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற கலெக்டர், நீ இப்படி தொல்லை கொடுத்தால், விடியும் முன் ஜெயிலில் இருப்பாய் என கடுமை காட்டி உள்ளார். அதன் பின்னரே அவர்கள் போனை வைத்துள்ளனர். நான் அன்பாக நடந்து கொண்டு மக்களுக்கு முடிந்த அளவு சேவை செய்யனும்னு நினைக்கிறேன். இப்படி ஆளாளுக்கு படுத்துறாங்களே என்று கலெக்டர் புலம்பி உள்ளார். இதனை கேட்ட சக அதிகாரிகள், சார், உங்களை நம்பி வர்றவங்களுக்கு முடிந்த அளவு நல்லது செய்யுங்க. நெருக்கடி கொடுத்து மிரட்டி காரியம் சாதிக்க நினைக்கிறவங்க கிட்ட போலீஸ் மூலம் பதிலடி கொடுங்க, நீங்க மட்டும் மனசு உடைச்சு போயிராதீங்க.. பலருக்கு நடக்க இருக்க நல்ல விஷயம் கெட்டுப்போகும் என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு