தேனியில் களை கட்டும் சிறு தொழில்..! மாவு விற்கும் தொழிலில் 700 பெண்கள்..!
இட்லி தோசை மாவு பேக்கிங் செய்யும் பெண்கள்.(கோப்பு படம்)
செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவைக்கு ஏற்ப மாவு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க முடியவில்லை என இட்லி மாவு விற்பனை செய்யும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
தேனியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்தாலும், முழுக்க, முழுக்க கிராமிய கலாச்சாரமே உள்ளது. பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், வடபுதுப்பட்டி, குன்னுார், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட கிராமங்களில் தனி நகராட்சியுடன் ஒட்டியே உள்ளன. இக்கிராமங்களில் ஓட்டலுக்கு சென்று சாப்பிடும் வழக்கம் பெரிய அளவில் இல்லை. இதனால் தேனியில் ஓட்டல் தொழில் பெரிய அளவில் வளரவில்லை. தற்போது உள்ள ஓட்டல்களும் கூட சுற்றுலா பயணிகள், வெளியூர் பயணிகளை நம்பியே இருக்கிறது. மாறாக தேனியில் பலரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிக, மிக குறைவு.
புளிக்கொட்டரை, கடைகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் என பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இவர்கள் இரவு வீடு திரும்ப அதிக நேரம் ஆகிறது. அதன் பின்னர் மாவு அரைத்து இட்லி, தோசை சாப்பிடுவது முடியாத செயல். கடைகளிலும் சாப்பிட யாரும் விரும்புவதில்லை. ஓட்டல்களில் உணவுப்பொருட்களின் விலையும் ஒரு முக்கிய காரணம்.
இந்த சூழலை பல குடும்ப பெண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இட்லி, தோசை மாவு அரைத்து காலை, மாலை நேரங்களில் விற்பனை செய்கின்றனர். இந்த தொழிலில் மட்டும் தேனியில் சுமார் 700 பேர் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிலர் இட்லி, தோசை மாவுகளை அண்டாவில் வைத்து தலைச்சுமையாக தெருத்தெருவாக சென்று விற்பனை செய்கின்றனர்.
இது குறித்து பெண்கள் கூறியதாவது:
இட்லி, தோசை மாவு காலை, மாலை நேரங்களில் விற்பனை நன்றாக உள்ளது. குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவைக்கு ஏற்ப மாவு வழங்க முடியவில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலையில் வைக்கும் சாம்பாருடன் இரவில் ஏதாவது ஒரு சட்னி மட்டும் வைத்துக் கொள்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மதியம் வைக்கும் மட்டன், மீன் குழம்பினை இரவில் வைத்துக் கொள்கின்றனர். இதனால் இந்த குறிப்பிட்ட மூன்று நாட்களில் இட்லி, தோசை மாவு தேவை அதிகமாக உள்ளது. பலர் பெரிய எந்திரங்கள் பயன்படுத்தி மாவு அரைத்து கேரளாவில் உள்ள ஓட்டல்களுக்கு தினமும் விநியோகம் செய்கின்றனர். இவ்வாறு கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu