தேனியில் நாளை ராஜினாமாவா? பதவியேற்பா? திமுகவில் திக்.. திக்...
தேனி நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன்.
தி.மு.க., கட்சி மேலிடம் தேனி நகராட்சி தலைவர் பதவியை காங்., கட்சிக்கு வழங்கியது. தலைமையை எதிர்த்து முதன் முறையாக நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றி உள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை தி.மு.க.,வை ஒட்டுமொத்தமாக கலங்கடித்துள்ளது.
தி.மு.க., நகர செயலாளர் பாலமுருகன் மனைவி ரேணுப்பிரியா பாலமுருகன் தி.மு.க.,வின் மேல்மட்ட தலைவர்கள் ஆசியுடன் தான் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு ராஜினாமா செய்ய உத்தரவு வழங்குவார் என கடைசி நிமிடம் வரை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் நிலைகுலைந்து போய் உள்ள தி.மு.க., தலைமை நிர்வாகிகள் பாலமுருகனின் நிலையை நினைத்து மிகவும் கவலையில் உள்ளனர். இதற்கு முழுமையான காரணம் இல்லாமல் இல்லை. பாலமுருகன், அவரது மனைவி ரேணுப்பிரியா இருவருமே மிகவும் வசதியான மற்றும் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான். ரியல் எஸ்டேட் தொழில், விவசாயம், சூப்பர் மார்க்கெட் என தொழிலில் கொடி கட்டிப்பறந்தார் பாலமுருகன்.
அரசியலுக்கு வந்ததும் அத்தனையும் தவிடுபொடியானது. அதுவும் ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வை எதிர்த்து பல ஆண்டுகள் தேனி தி.மு.க., நகர செயலாளர். கட்சியை பலப்படுத்த பணத்தை வாரி இறைத்தார். அரசியலுக்கு வந்ததால் தொழிலை கவனிக்க முடியாமல் போனது. இதனால் தொழிலில் அடுத்தடுத்து பலத்த அடி விழுந்தது. விவசாயத்திற்கும் கொரோனா தீ வைத்து விட்டது. முதல் அலை தொடங்கிய போது, வாழை சாகுபடியில் மட்டும் பாலமுருகனுக்கு 2 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல் தொழில், விவசாயம் என எல்லாமே செலவுகளை இழுத்து விட்ட நிலையில், அரசியல் செலவுகளும் அவரை மூழ்கடித்து விட்டது. தற்போது அவர் ஒரு மூழ்கும் கப்பலாக உள்ளார்.
அவரது அரசியல் வாழ்க்கை தான் இத்தனைக்கும் காரணம் என்பதை தேனி, திண்டுக்கல் மாவட்ட அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டதால், கடைசி நிமிடம் வரை பாலமுருகனுக்கு உதவ வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அதேநேரம் அவர்களால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறவும் முடியவில்லை. பாலமுருகன் இந்த போராட்டத்தில் வென்றால் மன்னன். தோற்றால் நாடோடி என்பது அத்தனை பேருக்கும் தெரியும். எப்போதும் சிரித்த முகத்துடன் எந்த கவலையும் இன்றி தேனியில் வலம் வந்த பாலமுருகன் தற்போது என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற உச்சகட்ட நிலைக்கு வந்து விட்டார்.
எதிரணியில் தனது காங்., கட்சியை சேர்ந்த தனது தாய்க்கு ஆதரவாக களம் இறங்கி உள்ள டாக்டர் தியாகராஜன் மிகவும் அதீத பணக்காரர். அதேபோல் அதிபயங்கர செல்வாக்கு கொண்டவர். அந்த குடும்பத்தின் செல்வாக்குக்கு நகராட்சி தலைவர் பதவி என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நினைத்தவுன் காங்., மாநில தலைவர் கே.எஸ்., அழகிரியை போனில் தொடர்பு கொள்ளக்கூடியவர். நினைத்த சில நிமிடங்களில் ராகுல் காந்தியை தொடர்பு கொள்ளக்கூடியவர். அந்த அளவு செல்வாக்கு உள்ள டாக்டர் தியாகராஜன், அடுத்தடுத்து எம்.எல்.ஏ., அமைச்சர் என்ற இலக்கில் பயணிக்க உள்ளார்.
அவருக்கு தேனி நகராட்சி தலைவர் பதவி ஒரு கவுரவ பிரச்னை மட்டுமே. இதில் தோற்றால், அவரது செல்வாக்கு சரிந்து விடும் எனக்கருதி, தனது செல்வாக்கினை தக்க வைக்கவே போராட்டம் நடத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலினின் உத்தரவு ஒன்று மட்டுமே அவருக்கு மிகுந்த பலமானதாக உள்ளது. இல்லாவிட்டால் தி.மு.க.,வை அவரால் எதிர்கொள்ளவே முடியாது.
தேனியில் தற்போது உள்ள சூழல் அப்படி. இதில் இன்றைய பேச்சு வார்த்தையில் விதி விளையாடப்போகிறது. அது யாரை வாழ்த்த போகிறது? யாரை வீழ்த்த போகிறது என்பது நாளை காலை தெரியும். பாலமுருகன் தனது மனைவி ரேணுப்பிரியாவை ராஜினாமா செய்ய அனுமதிப்பாரா? அல்லது பதவியேற்க வைத்து மிகப்பெரும் தொடர் போராட்டத்திற்கு தயாராக போகிறாரா? என்பதை ஒட்டு மொத்த தேனி மாவட்டமும் கவனித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu