பிரச்னை இன்றி தீர்க்கப்படுமா? ஆசிரியர்களின் கோரிக்கைகள்
இது குறித்து நாகை பாலா வெளியிட்டுள்ள பதிவு ஆசிரியர் சங்க வலைதளங்களில் உலா வருகிறது. இதனை நம் வாசகர்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.
அலை கடலென கூட்டம் என நாம் வீர வசனம் பேசினாலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறைவு தான்.
பேரியக்கம், சின்ன பேரியக்கம், சிறு இயக்கம், குறு இயக்கம் என அனைத்து இயக்கங்கள் சேர்ந்து நடத்தினாலும் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவு தான். ஆசிரியர்களுக்கு இயக்கங்கள் மேல் நம்பிக்கை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மணப்பாறை மிகாவேல் ஆசிரியர் பதிவிட்டுள்ளார். அது ஒரு காரணமாக இருக்கலாம்.
நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு இடையே நடத்தப்பட்டது ஒரு காரணம் என சிலர் கூறுகின்றனர். மாநிலம் முழுவதிலும் தொடக்க கல்வி இயக்கங்களில் உறுப்பினராக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சொற்ப அளவில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கலந்து கொண்ட ஒரு சிலரும் இயக்க உணர்விற்காகவும் அரை மனதோடு கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க ஓரிரு பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் 243 அரசாணை பிறப்பித்ததற்காக தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாட்டுக்கு தேதி அறிவித்துள்ளன. கல்வி அமைச்சரும் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். அரசுக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய இயக்கத் தலைவர்கள் நன்றி அறிவித்துக் கொண்டுள்ளனர். உண்ணாவிரத கூட்டங்களில் தமிழ்நாடு முழுவதும் பேசிய மாநில பொறுப்பாளர்கள் 10% பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அது வாபஸ் பெறப்பட வேண்டும் என பேசியுள்ளனர். இது கூட்டத்தில் கலந்து கொண்ட பட்டதாரி ஆசிரியர்களையும் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்களையும் மனதை பாதித்துள்ளது. அப்படி என்றால் எங்கள் நலனில் நாங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்திற்கு அக்கறை இல்லையா? நாங்கள் தேவையில்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்கட்டும். டிட்டோஜாக் போராட்டத்தின் வெற்றியாக அரசாணை 243 வாபஸ் பெறப்பட்டால் என்ன நடக்கும்? பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் நீதிமன்றம் சென்று தடை பெற முயற்சிக்கலாம். அல்லது அவர்கள் ஒரு போராட்டத்தை தொடரலாம். திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் அவர்களுடைய கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளனர்.
மாநில முன்னுரிமை என்பது ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறையில் 6 முதல் 12 வகுப்பு ஆசிரியர்களுக்கு பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் தொடக்கக் கல்வித் துறைக்கு மாநில முன்னுரிமை கூடாது என்பதற்கு வலுவான வாதங்கள் நாம் திரட்ட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதில் தற்போது பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை அதை அவர்கள் எதிர்க்கவும் இல்லை. எனவே பழைய நிலை போல உடனடியாக ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறலாம் என்ற திருத்தத்தை கொண்டு வர முயற்சிக்கலாம்.
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதில் மட்டுமே பிரச்சனை உள்ளது. 60 ஆண்டுகளாக பெற்று வரும் உரிமையை தங்களுக்கு வேண்டும் என தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.
இது தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்க வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் விரும்புகின்றனர். ஏற்கனவே உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் நடத்தாமல் நேரடியாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியாது என தீர்ப்பினை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாதம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனக் கூறுகின்றனர். ஆறு ஏழு எட்டாம் வகுப்புக்கு ஒரு நாள் கூட கற்பிக்காமல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எப்படி நேரடியாக நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியும் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் வழக்கம் போல் பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறலாம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறலாம் என்ற திருத்தத்தை இந்த அரசாணையில் பெற்று விட்டால் 90% உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக தற்போது பணியாற்றுபவர்களுக்கு இந்த அரசாணையால் எவ்வித பிரச்சனையும் இல்லை.
எனவே ஒரு சார்பாக யோசிக்காமல் யாருக்கும் பாதிப்பின்றி இந்த பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu