தொழிலில் கணவனுக்கு ‛கை’ கொடுக்கும் தேனி மாவட்ட புதுமை பெண்கள்
தலைப்பினை படித்ததும் சிரிக்கவே தோன்றும். இது தானே நம் கலாச்சாரம். தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இது தானே நடக்கிறது. ஏன் குடும்பத்திற்கான கட்டமைப்பு இல்லாத மேல்நாட்டு கலாச்சாரம் கொண்ட பல்வேறு உலக நாடுகளிலும் இது தானே நடக்கிறது. இதில் புதுமை எங்கே இருக்கிறது என்று கேட்கவே தோன்றும். உங்கள் கேள்வியும் உண்மை தான்.
ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள பெண்கள் உண்மையிலேயே புதுமை பெண்கள் தான். சற்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே இந்த பெண்களின் தியாகம் உணர்வும், குடும்பத்தின் மீதும், கணவன் மீதும் கொண்டுள்ள பற்றும் தெரியவரும்.
வழக்கமாக காய்கறிக்கடை, பெட்டிக்கடை, பலசரக்கு கடை, ஓட்டல்கள், ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி ஆண்கள் நடத்தும் அத்தனை தொழில்களிலும் பெண்கள் ஊடுறுவி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பல இடங்களில் நாம் கூடையில் காய்கறிகளை சுமந்து கொண்டு, தெருத்தெருவாக சென்று விற்பனை செய்யும் பெண்களை பார்த்திருப்போம். மீன் கூடையினை சுமந்து சென்று விற்பனை செய்யும் பெண்களையும் பார்த்திருக்கிறோம்.
தேனி மாவட்டத்தில் பெண்கள் ஒரு படி மேலே சென்று கோழி இறைச்சி கடைகள், ஆட்டு இறைச்சி கடைகளிலும் கணவனுக்கு உதவியாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த கடைகளில் கல்லாவில் அமர்வது மட்டுமல்ல அவர்களின் வேலை. கோழியை அறுத்து சுத்தம் செய்து எடை போட்டு வெட்டிக் கொடுப்பது, ஆட்டினை கணவன் அறுக்கும் போது, ரத்தத்தை கிண்ணத்தில் பிடித்து, குடல், இரைப்பையினை சுத்தம் செய்து, கொடுப்பது போன்ற வேலைகளை பெண்கள் முன் நின்று செய்கின்றனர்.
கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் ஆட்டுக்கறி வெட்டி கொடுப்பது, எலும்பு வெட்டிக் கொடுப்பது, தலை மற்றும் கால்களை வாட்டி சுத்தம் செய்து சமையலுக்கு ஏற்ற வகையில் வெட்டிக் கொடுப்பது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் பெண்கள் தான் செய்கின்றனர். கணவன் வீட்டில் எப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்று பல்வேறு கனவுகளுடன் திருமணம் முடித்து வரும் பெண்கள், கணவனின் வாழ்க்கை மட்டுமின்றி தொழில் சூழ்நிலையையும் முழுமையாக உணர்ந்து கணவனுடன் வாழ்க்கையை மட்டுமின்றி தொழில் தன்மையையும் பங்கு போட்டுக்கொண்டு, உடன் இருநது கணவனுக்கு மனோ ரீதியான தைரியத்தை கொடுப்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை.
ஆடு அறுப்பது, குடல், இரைப்பைகளை சுத்தம் செய்வது, தலை, கால்களை வாட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்யும் போது அந்த இடத்தின் சூழலும், அதனை செய்பவர்களின் சூழலும் எப்படி இருக்கும். அதுவும் அந்த சூழலை பொதுஇடத்தில் வியாபார தலத்தில் செய்து,, கணவனின் சுமையை பங்கு போடும் பெண்களின் மனோ தைரியத்தை ஈடுகட்ட எந்த உவமையும் கூற முடியாது. அவர்களின் மனோபலத்திற்கு ஈடான விஷயத்தை சுட்டிக்காட்டுவதும் சுலபம் அல்ல
தேனியில் மட்டும் ஆடு, கோழி, மீன் இறைச்சி கடைகளில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிவதாக சுகாதாரத்துறை கணக்கு சொல்கிறது. மாவட்டம் முழுவதும் எடுத்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை நான்கு இலக்கத்தை தாண்டி விடும். இதற்கென தனிக்கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளே வியந்து போய் உள்ளனர். நமக்கும் இவர்களை போல் வியப்பு ஏற்பட்டாலும், இந்த பெண்களின் மனோ தைரியத்திற்கும், தியாக உணர்வுக்கும் ஒரு சல்யூட் அடிப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu