தேனி மாவட்ட செய்தியாளர்களை கண்டு கேரளா அலறுவது ஏன்?

தேனி மாவட்ட  செய்தியாளர்களை கண்டு  கேரளா அலறுவது ஏன்?
X

கேரள அதிகாரிகளை கண்டித்து குமுளியில் போராட்டம் நடத்திய தமிழக செய்தியாளர்கள்

முல்லைப்பெரியாறு பிரச்னையாக இருந்தாலும், கண்ணகி கோயில் பிரச்னையாக இருந்தாலும், தேனி மாவட்ட செய்தியாளர்களை கண்டு நடுங்கும் கேரளா.

தமிழகத்தின் தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் ஒட்டி அமைந்துள்ளன. முல்லை பெரியாறு அணை பிரச்னை, கண்ணகி கோயில் பிரச்னை இரு மாநிலங்களுக்கும் தீராத தலைவலியாகவே இருந்து வருகிறது.

  • இந்த இரண்டு பிரச்னைகளிலும் தமிழகத்தின் உரிமை என்ன? கேரளாவின் உரிமை என்ன?
  • தமிழக அதிகாரிகள் யார்? யார்? கேரள அதிகாரிகள் யார்? யார்? இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது.
  • யார் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். பிரச்னையை கிளப்புவது யார்? தமிழக, கேரள அரசியல்வாதிகளின் நிலைப்பாடு என்ன? அதற்கு காரணம் என்ன? (ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு சுயநலம் கலந்த காரணம் இருக்குமே),
  • தமிழகத்தின் பக்கம் உள்ள உண்மையான போராளிகள் யார்? அவர்களின் செயல்பாடுகள் என்ன? கேரளாவின் பக்கம் உள்ள உண்மையான போராளிகள் யார்? அவர்களின் செயல்பாடுகள் என்ன?
  • யார் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் துரோகம் செய்வது என்பது உள்ளிட்ட பல விவரங்களை தேனி மாவட்ட செய்தியாளர்கள் துல்லியமாக கையில் வைத்திருப்பார்கள்.

குறிப்பாக கூடலுார், கம்பம், உத்தமபாளையத்தை சேர்ந்த தமிழக செய்தியாளர்கள் இந்த பிரச்னையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்றே கூறலாம். கண்ணகி கோயில், முல்லை பெரியாறு அணை பிரச்னைகளில் ஒரு மைக்ரோ பாயிண்ட் அளவு விதிமீறல், சதி என எது நடந்தாலும் மிகச்சரியாக அந்த பிரச்னையை தேர்வு செய்து பூதாகரமாக்கி இருமாநிலங்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடுவார்கள்.

கடந்த வாரம் கூட முல்லை பெரியாறு அணை பிரச்னை பற்றி சுப்ரீம் கோர்ட்டில் விவாதம் நடந்து வரும் போது, முல்லை பெரியாறு அணையை இடிக்க போராடும் கேரள அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் இருந்து குவியும் நிதி பற்றி செய்தி வெளியிட்டு மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். அந்த செய்தியில் வெளிநாட்டு நிதி மூலம் இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்து ஏற்பட்டு விடலாம் என இந்த செய்தியாளர்கள் போட்ட போடு, தற்போது பிரச்னையை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. அந்த அளவு துல்லியமாக அடிப்பதில் தேனி மாவட்ட செய்தியாளர்கள் குறிப்பாக கூடலுார், கம்பம், உத்தமபாளையம் செய்தியாளர்கள் கில்லாடிகள்.

எந்த சமரசத்திற்கும் உடன்படாதவர்கள். இதனால் தமிழக அதிகாரிகள், அரசியல்வாதிகள் மட்டுமின்றி, கேரள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூடலுார், கம்பம், உத்தமபாளையம் செய்தியாளர்களை கண்டால் அலறி ஓடுவார்கள். கேரளா ஒரு படி மேலே சென்று இவர்களை உள்ளே நுழைய விட வேண்டாம் என தமிழக அதிகாரிகளிடையே கோரிக்கை வைப்பார்கள். அதனை சில தமிழக அதிகாரிகளும் நிறைவேற்றுவார்கள். இப்படித்தான் இன்று நடந்த சித்ரா பௌர்ணமி நாள் விழாவிலும் நடைபெற்றது.

இன்றும் தமிழக செய்தியாளர்கள், போட்டோகிராபர்களை உள்ளே நுழைய கூடாது. சும்மா வேண்டுமானால் சாமி கும்பிடட்டும். போட்டோ எடுக்க கூடாது. செய்தி போடக்கூடாது என தடுப்பது கேரளாவின் வழக்கம். இதனை இன்று நேற்றல்ல... முல்லை பெரியாறு அணை, கண்ணகி கோயில் பிரச்னை தொடங்கிய நாளில் இருந்தே செய்து வருகின்றனர்.

தமிழக அதிகாரிகளோ இவர்கள் வந்தால் நமக்கு மட்டும் தலைவலி இல்லை... தமிழக அரசுக்கும் தலைவலியை ஏற்படுத்தி விடுவார்கள் என கேரளா சொல்வதை கேட்டு செயல்படுவார்கள். இன்றும் தமிழக செய்தியாளர்களை கேரள அதிகாரிகள் மறிக்க... தமிழக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க... 'நீங்கள் என்ன செய்தாலும் அதானே செய்தி... என்ற ரீதியில் தமிழக செய்தியாளர்கள் வீராப்பு காட்டி' இன்றும் குமுளியில் மறியல் நடத்தி, வீராவேசமாக வெளியேறி வந்துள்ளனர்.

ஆனால் செய்தி... கேரளா ஐநுாறு அடி தடுப்புச்சுவர் எழுப்பி பிரச்னையை மறைக்க முயன்றாலும் தமிழக செய்தியாளர்களின் கண்களில் இருந்து மறைக்கவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டதாகவா அர்த்தம்?!!

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு