பெரியாறு அணையில் மீண்டும் தமிழக போலீஸ்?
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு செட்டில்மெண்ட் ஏரியா. கிட்டத்தட்ட 8200 ஏக்கருக்கு ஆண்டுதோறும் வாடகையை பெற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு முற்றாக கையளிப்பு செய்யப்பட்ட ஒரு பகுதி.
முறையாக நாம் வாடகை செலுத்தும் ஒரு பகுதியில் வந்து, தமிழ்நாடு அரசினுடைய எவ்வித அனுமதியும் இன்றி, உள்ளே அமர்ந்து கொண்டு, நாங்கள் தான் எல்லாம் என்று கையில் துப்பாக்கிகளோடு கேரள போலீசார் வலம் வருவது என்பது, ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.
தமிழகத்தின் பொறியாளர்கள், அணைக்குள் செல்லும்போது அடாவடி செய்வதும், அத்துமீறல் செய்வதும், என்ன கொண்டு வருகிறீர்கள் என்று சோதனை செய்யும் அளவிற்கு கேரள காவல்துறை அணையில் அத்து மீறுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.
24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக அணையை பராமரிக்கும் தமிழக பொறியாளர்கள் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட தமிழனை படகு, கடந்த 2014 ம் ஆண்டு அணைக்கு வந்தது. 10 ஆண்டுகளை கடந்தும் அந்தப் படகை நம்மால் அணைக்குள் ஓட்ட முடியவில்லை.
அதற்கு பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களை சொல்லிய கேரள மாநில அரசு மற்றும் கேரள மாநில வனத்துறை, குறிப்பாக பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள், அதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். தற்போது நமது பொறியாளர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும், ஜலரத்னா படகு கடந்த 1982 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட படகு. அதுபோல நமது பொறியாளர்கள் பயன்படுத்தும் கண்ணகி படகு வாங்கப்பட்டது 1984 ஆம் ஆண்டு.
வெறும் 27 குதிரை திறனை கொண்ட பழமையான இந்தப் படகுகளை கேரள மாநில அரசு எந்நேரம் நிறுத்தலாம் என்கிற நிலையில், அணைக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்கிற போர்வையில் அத்துமீறி உள்ளே நுழைந்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், கேரள காவல்துறையை சேர்ந்த மூன்று இன்ஸ்பெக்டர்கள், ஆறு உதவி ஆய்வாளர்கள், ஒரு டி.எஸ்.பி தலைமையிலான 120 போலீஸ்காரர்கள், அணைக்குள் வந்து போவதற்கு ஏற்கனவே 40 குதிரை திறன் கொண்ட Speed Boat ஒன்று இருக்கிறது.
அதுபோக 47 குதிரை திறன் கொண்ட பென்னிகுவிக் என்கிற பெயரிலும் ஒரு படகை வைத்திருக்கிறார்கள். இதுபோக இன்று 150 குதிரை திறன் கொண்ட, outboard இன்ஜின் கொண்ட புது படகு ஒன்றும் கேரள காவல்துறைக்காக வாங்கப்பட்டு, இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கே.விஷ்ணு பிரதீப் முறைப்படி அணைக்குள் படகை இயக்கி வைத்ததோடு, அணைக்கும் வந்து சென்று இருக்கிறார்.
கொச்சினில் உள்ள போட் அத்தாரிட்டியிடம் அனுமதி பெற்ற தமிழனைக்கு இன்று வரை அனுமதி இல்லை. ஆனால் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு அணைக்குள் வந்து, தமிழக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், ஒரு மாவட்ட கண்காணிப்பாளரால்,ஒரு படகை இயக்கி வைக்க முடியுமா...? 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் ஆரம்பித்த உரிமை பறிப்பு, இன்றுவரை நீடித்து வருவதை தமிழக அரசாங்கம் எதற்காக வேடிக்கை பார்க்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்குள் கேரள மாநில அரசால் இயக்கப்படும் அத்தனை படகுகளுக்கும், முறையான அனுமதியை பெற வேண்டும் என்கிற அழுத்தத்தை கேரளாவிற்கு தமிழகம் கொடுக்க வேண்டும். இல்லையேல் மறுபடியும் போராட்டக் களத்தில் இறங்குவோம்.
ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குறைந்தபட்ச தமிழக காவலர்கள், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணிக்காக தங்க வைக்கப்பட வேண்டும். இல்லையேல் அணைக்குள் அத்துமீறும் கேரளாவை ஒருபோதும் நாம் தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu