குமரி மாவட்டத்தில் அண்ணாமலை எதற்காக முகாமிட்டுள்ளார் தெரியுமா ..?
பைல் படம்
ஏற்கெனவே கல்லூரி மாணவர்கள் மத்தியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை (ஏபிவிபி) கிளைபரப்பி வைத்திருக்கிறது ஆர்எஸ்எஸ். அதை இன்னும் விஸ்தரிக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதன் முதல்படியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் அமர்வுகளை ஏற்பாடு செய்யும்படி அண்ணாமலையிடம் இருந்து பாஜக மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவுகள் பறந்திருக்கிறதாம்.
அந்தவகையில் கன்னியாகுமரியில் பள்ளி - கல்லூரி மாணவர்களில் இந்து சிந்தனையாளர்களை தேர்ந்தெடுத்து 'விவேகானந்தர் நல்லோர் வட்டம்' என்ற அமைப்பு கருத்தரங்கு ஒன்றை பா.ஜ., நடத்துகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் அண்ணாமலை, 'தேசியத்திற்கு எதிரான சிந்தனைகளை விதைப்பவர்களின் மூளைச்சலவைக்கு பலியாகக்கூடாது' என்ற கருத்தை மாணவர்கள் மத்தியில் விதைக்கத்தான் இந்த நிகழ்ச்சியாம்.
இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள அண்ணாமலை குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் முகாமிடுகிறார். கன்னியாகுமரி, பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனின் சொந்த ஊர். இங்கே பாஜக அவரது கண்ணசைவில் தான் பெரும்பாலும் இயங்கும். இதனால், தமிழிசை பாஜக தலைவராக இருந்த போதுகூட குமரி மாவட்டத்தில் அதிகம் தலைக்காட்டாமல் கவனமாக அரசியல் செய்தார்.
தற்போது, தமிழக பாஜகவில் கேசவ விநாயகனுக்கும் அண்ணாமலைக்கும் உள்ளுக்குள் காரசார மோதல் நீடித்து வரும் நிலையில், குமரி மாவட்டத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் அங்கே இரண்டு நாட்கள் முகாம் போட்டிருக்கிறாராம் அண்ணாமலை. இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, தங்கி பா.ஜ.,வை வளர்க்கும் திட்டம் அண்ணாமலையிடம் உள்ளதாம். இதற்கான உத்தரவுகள் மாவட்டத்தலைவர்களுக்கு சென்று கொண்டே உள்ளதாம். விரைவில் பா.ஜ.,வில் பல்வேறு மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். அண்ணாமலையின் அரசியல் நாளுக்கு நாள் சுறுசுறுப்படைந்து வருகிறது. அவருக்கு என தமிழகத்தில் உருவாகி உள்ள ரசிகர்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் பணிகளி்ல் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது எனவும் அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu