பீகாரில் பா.ஜ.க.,வுக்கு நிதிஷ்குமார் ஏன் தேவை..?

பீகாரில் பா.ஜ.க.,வுக்கு நிதிஷ்குமார் ஏன் தேவை..?
X
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, INDIA கூட்டணியை அமைத்தன.

இந்தக் கூட்டணி அமைவதற்கு முக்கிய பங்காற்றியவர்களில் ஜே.டி.யு., தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் முக்கியமானவர். மேலும், நிதிஷ்குமார் எதிர்க்கட்சியின் கூட்டணியில் முக்கிய முகங்களில் ஒருவராகவும் கருதப்பட்டார். காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்,``நிதிஷ்குமார் தான் `இந்தியா’ கூட்டணியைக் கூட்டினார். அவர் கடைசி வரை பா.ஜ.க-வை எதிர்த்து போராடுவார் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன என நிதிஷ் குமார் குறித்து முன்னர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், INDIA கூட்டணியின் 4-வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. அதில் INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பீகார் முதல்வரும், ஜே.டி.யு., கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் முன்மொழியப்பட வேண்டும் என அவரின் கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் முன்மொழிந்ததும் பேசுபொருளானது.

அதேநேரம் சீட் பகிர்வு விவகாரத்தில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் - காங்கிரஸ், பஞ்சாப்பில் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் போக்கு நீடிக்கிறது. அதனால், பா.ஜ.க-வைத் தனித்தே எதிர்த்து போராடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் தெரிவித்திருக்கின்றன. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரதரத்னா விருதை அறிவித்தது.

அதிலிருந்து நிதிஷ் குமார் `இந்தியா’ கூட்டணியிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து பீகார் அரசியல், இந்திய அளவில் கவனத்துக்குள்ளானது. இந்த நிலையில் தான், பீகார் ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்,``இன்று என்னுடைய முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் கூறிருக்கிறேன். எதுவுமே சரியில்லாததால் தான் இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக `இந்தியா’ கூட்டணியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால், எந்தவொரு விஷயமும் செயல்படவில்லை. இப்போது புதிய கூட்டணியை உருவாக்குவோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

`INDIA கூட்டணி உறுதியற்ற கூட்டணி’ என்ற பா.ஜ.க-வின் வாதத்தை INDIA கூட்டணியின் தொடர் சரிவுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. பீகார் மாநிலத்திலுள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி 79, பா.ஜ.க 78, நிதிஷ் குமார் தலைமையிலான ஜே.டி.யு- 45, காங்கிரஸ் 19, CPI (M-L) 12, CPI (M), CPI தலா 2, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4, AIMIM 2, ஒரு சுயேச்சை வேட்பாளார் என்ற அடிப்படையில், உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஆர்.ஜே.டி - ஜே.டி.யு கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், தற்போது அதைக் கலைத்துவிட்டு, ஜே.டி.யு - பா.ஜ.க கூட்டணியில் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்துள்ளார். கடந்த காலங்களில் நிதிஷ் குமார் இதுபோல பலமுறை கூட்டணி மாறி மாறி முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆரம்பகாலத்தில், அவரது கட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்காக `சுஷாஷன் பாபு' (வளர்ச்சி நாயகன்) என அழைக்கப்பட்டவர், தற்போதைய இத்தகைய அரசியல் தொடர் செயல்பாடுகளால் 'பல்து குமார்' - (கட்சி மாறிக்கொண்டே இருப்பவர்) என்ற அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்.

'ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க-வின் கதவுகள் மூடப்பட்டு விட்டன' என ஓராண்டுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். தற்போது, அவரை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது பாஜக. அதற்குக் காரணம், தேர்தல் கணக்கு எனக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். பா.ஜ.க-வைப் பொறுத்த வரை, 40 லோக்சபா இடங்களைக் கொண்ட பீகாரும், மேற்கு வங்கமும், INDIA கூட்டணியின் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.

ஆனால், மேற்கு வங்கத்திலும், பஞ்சாப்பிலும் INDIA கூட்டணியின் உறவு சிக்கலிலுள்ள நிலையில், பீகாரிலும் ஆர்.ஜே.டி - ஜே.டி.யு கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைப்பது INDIA கூட்டணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே மத்திய தலைமை இந்த நடவடிக்கைக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கலாம். கடந்த 10 வருடங்களில், நிதிஷ் குமார் ஐந்து முறை கூட்டணி மாறியிருக்கிறார். இதனால், அவரது வாக்கு சதவிகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2010 பீகார் தேர்தலில் 115 இடங்கள் பெற்ற ஜே.டி.யு, 2015-ல் 71 இடங்களிலும், 2020-ல் வெறும் 43 இடங்களிலும் என இறங்குமுகத்தில் செல்கிறது. எனவே, தற்போதைய சூழலில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டாலும், பீகார் அரசின் முடிவுகளில் ஜே.டி.யுவை விட பா.ஜ.க-வின் குரல் இனி ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேநேரம், மகாராஷ்டிராவில், சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஷிண்டே என இரண்டாக உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மேலும், சரத் பவாரின் பலம் வாய்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை, சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், இரண்டாக உடைத்து 40 எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க கூட்டணி அரசில் இணைந்தார்.

அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியது பா.ஜ.க. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களின் ஒரு பிரிவினர் விலைக்கு வாங்கப்பட்டதாக பா.ஜ.க-மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றசாட்டு பீகாரில் எழாமலேயே, இந்த முறை பீகாரில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பா.ஜ.க. இந்த முறை நிதிஷ் குமார் மீதே விமர்சனம் வைக்கப்படுகிறது.

இன்னும் தேர்தல் வருவதற்கு அரசியல் களம் எத்தனை மாற்றங்களைச் சந்திக்கும் என்பதைக் காலம்தான் முடிவு செய்யும்!

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil