கடல் ஆமைகள் ஏன் நிலத்திற்கு வந்து முட்டையிடுகின்றன...?
பைல் படம்
எங்கோ கடலின் ஆழத்தில் வாழும் ஆமை தரையில் முட்டையிட எப்படிக் கற்றுக் கொண்டது என்ற உண்மை சற்று வித்தியாசமானது.
கடலாமை என்பது ஊர்ந்து செல்லும் ஆமை பிரிவைச் சேர்ந்த பெருங்குடும்பம் ஆகும். இவை கடலில் வாழ்ந்தாலும் கரைப் பகுதியில் ஏறத்தாழ அரை மீட்டர் ஆழத்திற்குக் குழி தோண்டிதான் முட்டையிடுகின்றன. கடல் ஆமைகளில் சில 150 வருடம்வரை கூட உயிர் வாழும். ஆமைகளை, அவற்றின் மேல் ஓட்டின் வடிவத்தை வைத்துத்தான் இனம் பிரித்து அறிகிறார்கள்.
கடலாமை தரையைக் கண்டடையவில்லை. மாறாக, தரையில் வாழ்ந்த ஆமையின் மூதாதையர்கள் கடலில் வாழக் கற்றுக் கொண்டார்கள். என்றாலும் அவர்கள் முட்டையிடும் சடங்கை மட்டும் இன்னும் தம் தாய் நிலத்திலேயே தொடர் கிறார்கள். இப்படிச் சொல்வதுதான் பரிணாம ரீதியில் சரியானது.
ஆமைகள், 'Reptiles' எனப்படும் ஊர்வன இனத்தைச் சார்ந்த குளிர் இரத்தப் பிராணிகள் (cold Blooded Animals). முதன் முதலில் கடலில் உருவான உயிர்கள் தரையை அடைந்து தம்மை நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகளாக வடிவமைத்துக் கொண்டன.
அப்போது அவற்றின் பெரும்பாலான வாழ்வு நிலத்திலும் இனப்பெருக்கம் நீரிலுமாக இருந்தது. இதன் தொடர்ச்சியை தவளைகளிடையே இன்னும் காணலாம். பின்னர் இருவாழ்விகள் (amphibians) ஊர்வனவாகப் பரிணமித்த போது தரையிலேயே வாழ்ந்து முட்டையிடுபவைகளாக அவை மாறின.
இதனை ஓணான்கள், பாம்புகள் போன்ற உயிரினங்களிடையே நாம் காணலாம். இவற்றில் சில ஊர்வன இனங்கள் தரையில் முட்டையிட்டாலும் தம்முடைய நீர் வாழிடத்தைத் தக்க வைத்துக் கொண்டன. மேலும், முழுமையாக தம்மை நீர் வாழ்வியாகவே தகவமைத்துக் கொண்டன.இவ்வாறுதான் ஆமை கடலுக்குள் புகுந்து கடலாமை ஆனாலும் தன் தாய்வீட்டுத் தொடர்பை நீட்டித்துக் கொண்டிருக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu