தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை ஏன் தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்

தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை பகுதிகளை ஏன் தன்னாட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும்
X

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

இடுக்கி மாவட்டம் தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை ஏன் திரும்ப கேட்கிறோம் என விவசாயிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களையும் எதற்காக மத்திய ஆட்சிப் பகுதியாக மாற்ற வேண்டும் என்பதற்கு தமிழக ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஐந்து மாவட்ட (தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம்) விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமீப காலங்களாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை முன்வைத்து கேரளாவில் போராடக்கூடிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரும் கேட்கும் பிரதான கேள்வி, பெரியாறு அணைக்காக சென்னை ராஜதானியுடன், திருவிதாங்கூர் சமஸ்தானம் செய்து கொண்டது 99 ஆண்டு கால ஒப்பந்தமா அல்லது 999 ஆண்டு கால ஒப்பந்தமா என்பது குறித்தாக இருக்கிறது.

இன்னும் ஒருபடி மேலே செல்லும் சில பிராய்லர் கோழி மூளைக்காரர்கள், ஒப்பந்தத்தை ரத்து செய்து அணையை கேரள மாநில அரசு கையில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர்.

கேரளாவில் பலரும் விதவிதமாக எழுதுகிறார்கள், விதவிதமாக பேசுகிறார்கள். இந்த கபட சிந்தனைக்காரர்கள் வைக்கம் முகமது பஷீர், எம் டி வாசுதேவன் நாயர் போன்ற மலையாள எழுத்துலகின் பிதாமகர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளுவார்கள் போலிருக்கிறது, அந்த அளவுக்கு வன்மமாக எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்.

சட்டவிரோதமாக 1956 ஆம் ஆண்டு மொழி வழி பிரிவினைக் கமிட்டி நடத்திய எதேச்சதிகார பிரிவினையை எதிர்த்து நாமும் சடுதிப்பொழுதில் முழங்கிவிட முடியும். ஆனாலும் அமைதி காக்கிறோம். ஜமீந்தாரி முறை ஒழிப்பு, மன்னர் மானிய ஒழிப்பு என்பதெல்லாம் தெளிவாக நடந்து விட்ட பின்னரும், இந்த ஒப்பந்தம் எப்படி செல்லுபடி ஆகும் என்று சிலரும் என்னிடம் கேட்டது தான் வேதனையின் உச்சம்.

ஜமீன்தாரி முறை ஒழிப்பு என்பது ஜமீந்தார்களிடமிருந்து அதிகாரத்தை பறித்தது. மன்னர் மானிய ஒழிப்பு என்பது, மன்னர்களுக்கு இந்திய அரசு கொடுத்துக்கொண்டிருந்த மானியங்களை முற்றாக நிறுத்தியது. இரண்டுக்குமான அர்த்தங்களையும் வரலாற்றையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வியே எழாது.

ஒப்பந்தம் நடந்தது, பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சென்னை ராஜதானி என்கிற அரசு நிறுவனத்திற்கும், அன்றைக்கு தென்புலத்தில் கோடிக்கணக்கில் சொத்துக்களுடன் இருந்த ஒரு சமஸ்தானத்திற்குமிடையே நடந்தது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் பலனடைந்தவர்கள் விவசாயிகள் என்பதால், ரத்து என்பது குறித்தான பேச்சுக்கு இடமே இல்லை. வடபுலத்தில் இதுபோல நூற்றுக்கணக்கான ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் இந்தியாவிற்கு தங்கள் இடங்களை விட்டுக்கொடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணைகளை கட்டி இருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

எடுத்துக்காட்டாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் காரையாறு அணை, சேர்வலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை உள்ளிட்ட அணைகள் எல்லாம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டிருக்கிறது... கட்டியது அரசு என்றாலும் இடம் ஆதீனத்திற்கு சொந்தமானது.

அதேபோல் மாஞ்சோலை மலை உச்சியில் அமைந்திருக்கும் கோதையாறு அணை இருக்குமிடம் ,முன்னொரு காலத்தில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான இடத்தில் இருந்தது. அந்த அணையை பெருந்தலைவர் காமராஜர் கட்டிய போது அன்றைக்கு உயிரோடிருந்த சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி அவர்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் கூடுதல் உண்மை...

மக்கள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும் சுதந்திர இந்தியாவில் அது ரத்து செய்யப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவில், பழைய ஒப்பந்தங்கள் எல்லாம் ரத்து செய்யப்பட வேண்டுமென்றால். உடனடியாக குமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையை விட்டு கேரள மாநில அரசு வெளியேற வேண்டும். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பிரதான அருவி அருகே அமைந்திருக்கும் கிட்டத்தட்ட 60 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்து கேரள மாநில பொதுப்பணித்துறை உடனடியாக வெளியேற வேண்டும்.

அதுபோல பரம்பிக்குளம் ,பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய மூன்று அணைகளில் இருந்தும் கேரள மாநில அரசு தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி, மட்டத்துகாடு, கொழிஞ்சாம்பாறை, முக்காலி, பாலக்காடு நகரம், மலம்புழா, இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்கள், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெடுமங்காடு, நெய்யாற்றின் கரை, செங்கோட்டை தாலுகாவில் மேற்குப்பகுதியில் உள்ள கழுதுருட்டி வரையான பகுதிகள், பாண்டிய மரபைச் சேர்ந்த பூஞ்சார் சமஸ்தானத்தின் கீழ் கட்டுப்பட்டு கிடந்த கோட்டயம், பூஞ்சார், ஈராட்டு பேட்டை, பாலா, ராணி, கோனி, பத்தனம்திட்டா பத்தநாபுரம் , கொட்டாரக்கரை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் வரையிலான பகுதிகளை ஒட்டுமொத்தமாக விட்டு விட்டு, கேரள மாநில அரசு வெளியேறினால்.

நாங்களும் முல்லைப் பெரியாறு அணைக்காக 999 ஆண்டு கால ஒப்பந்தம் போட்டுக்கொண்ட, திருவிதாங்கூர் சமஸ்தானம்- சென்னை ராஜதானி இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்ய சம்மதிக்கிறோம்.

இதற்கு எத்தனை மலையாள சகோதரர்கள் தயாராக இருக்கிறீர்கள்...!

கடந்த 10 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தில் இருக்கும் டார்ஜிலிங் மலைப்பகுதியில் ஏற்பட்ட மாற்றம், தேவிகுளம் பீர்மேட்டிலும் நிகழலாம். தேயிலைத் தோட்டங்கள் நிறைந்து கிடக்கும் டார்ஜிலிங் மலைப்பகுதி, இன்றைக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக மறு உருவம் பெற்று இருக்கிறது...

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மையப்படுத்தி, உங்களுடைய வாய்களும், கைகளும் உளறிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்குமானால், ஒரே வரியில் எங்களாலும் சொல்ல முடியும், தேவிகுளம் பீர்மேடு உடுமஞ்சோலை ஆகிய மூன்று தாலுகாக்களும் 1956 மொழிவழி பிரிவினைக்கு முன்பு வரை தமிழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. எனவே அதனை எங்களிடம் தாருங்கள்... இல்லாவிட்டால் டார்ஜிலிங் போல் தன்னாட்சி பெற்ற பகுதியாக மாற்றுங்கள் என்கிறோம்.

நீங்கள் விதண்டாவாதமாக பேசுவதையும், எழுதுவதையும் நிறுத்தாவிட்டால், எங்களின் பேச்சும், எழுதும் இன்னும் நீளும். மாறிக்கொள்ளுங்கள் மலையாள சகோதரர்களே.இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!