பேபி அணையினை ஏன் பலப்படுத்த முடியவில்லை?
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரளா முட்டுக்கட்டை போட்டுவிட்ட நிலையில், எந்த அடிப்படையில் அணையினுடைய ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்யப் போகிறது தேசிய நீர்வள ஆணையம்.
நடந்தது என்ன? இனி நடக்கப்போவது என்ன?.
முல்லைப் பெரியாறு அணை அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அதனால் அணைக்கு பாதிப்பு வரலாம் என்றும், அணையை பலப்படுத்தி விட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளுங்கள் என்றும், 1979ம் ஆண்டில் கேரள முதலமைச்சராக இருந்த அச்சுத மேனன் விடுத்த வேண்டுகோளை, எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் திருவனந்தபுரத்திற்கு தமிழக அதிகாரிகளுடன் சென்று, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பத்தாண்டுகளுக்குள் அணையை பலப்படுத்தி விட்டு நீர்மட்டத்தை 152 அடியாக முல்லைப் பெரியாறு அணையில் உயர்த்திக் கொள்ளலாம் என்று கையொப்பமிட்டார்.
ஆண்டுகள் 45 கடந்தும், இன்னமும் நம்மால் அணையினை பலப்படுத்த முடியவில்லை. பிரதான அணையில் இருந்து பேபி அணைக்கு செல்லும் வழியில் உள்ள 23 மரங்களை வெட்டினால் தான்,கட்டுமான தளவாடப் பொருள்களை பேபி அணைக்கு கொண்டு செல்ல முடியும் என்கிற நிலையில், அந்த மரங்களை வெட்டுவது குதிரைக்கொம்பாக இருந்து வந்தது.
நீண்ட காலமாக அந்த 23 மரங்களை வெட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழகம் எழுப்பினாலும், முறைப்படி கடந்த 2015 ஆம் ஆண்டு,கேரள மாநில தலைமை வன பாதுகாவலருக்கு(The Principal chief conservator of Forest) கடிதம் எழுதியது தமிழக பொதுப்பணித்துறை.
நீண்ட பரிசீலனைக்கு பின்,கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி,கேரள மாநில தலைமை வனப் பாதுகாவலரான பென்னிக்கன் தோமஸ், கேரள மாநில கூடுதல் தலைமைச் செயலாளரின் வழிகாட்டுதலுக்கு இணங்க, 15 மரங்களை வெட்டுவதற்கு எழுத்துப்பூர்வமா உத்தரவிட்டார்.
0.25 ஹெக்டேர் பரப்பில், அதாவது 40 சென்ட் பரப்பில் உள்ள,புதர் மண்டிய பகுதியில் இந்த வேலை நடக்க வேண்டும். இந்த உத்தரவை தன்னிச்சையாக கேரள மாநில தலைமை வனப்பாதுகாவலர் அறிவிக்கவில்லை. அதே 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட, மத்திய நீர்வள ஆணையத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு, கேரள மாநில வல்லுநர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு முடிவெடுத்த பிறகு தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் விண்ணப்பம் நிலுவையில் இருந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக காரணமும் சொல்லப்பட்டது.
ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவுப்படி, அணை பகுதிக்கு வனப்பாதுகாப்பு சட்டம் மற்றும் வனவிலங்கு (பாதுகாப்புச்) சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக கூறியதை எவரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை.
இப்படியாக பல்வேறு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் நவம்பர் 5, 2021 ஆம் ஆண்டு, 15 மரங்களை வெட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார் பென்னிக்கன் தோமஸ். நவம்பர் 6 ஆம் தேதி பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனுடைய துணை இயக்குனர் சுனில் பாபு மூலம், பெரியாறு அணையின் செயற்பொறியாளர் சாம் இர்வினிடம் மரம் வெட்டுவதற்கான அனுமதி கடிதம் ஒப்படைக்கப்பட்டது.
கடிதம் கிடைக்கப்பெற்ற பொறியாளர் சாம் இர்வீன், கடிதத்தை தமிழக முதல்வரிடம் கொண்டு போய் சேர்த்தார். பதவி ஏற்று ஐந்து மாதங்களே ஆகியிருந்த நிலையில், மாண்புமிகு தமிழக முதல்வரும் அதை மிகப்பெரிய வெற்றியாக கருதி, ஒரு நீண்ட நன்றி கடிதத்தை கேரள மாநில முதல்வருக்கு அனுப்பி வைத்தார்.
மரங்களை வெட்ட வேண்டிய பொறியாளர் சாம் இர்வின், முதல்வருடைய நன்றி கடிதத்திற்காக காத்திருந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. முதல்வரின் நன்றி கடிதம் கேரள அரசியலில் சூறாவளியை உருவாக்கியதோடு, ஒரு கட்டத்தில் கேரள மாநில வனத்துறை அமைச்சரான ஏ.கே. சசிந்திரன்,,, என்னிடமோ, நீர்வளத்துறை அமைச்சரிடமோ, முதலமைச்சர் அலுவலகத்திலோ எவ்வித ஒப்புதலும் பெறாமல் இந்த கடிதம் வெளியிடப்பட்டதாக கூறி கடிதத்தை முடக்கினார்.
கூடுதலாக மரம் வெட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்த கேரள மாநில தலைமை வனப் பாதுகாவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நல்ல உறவில் அன்று முதல் இன்று வரை இருந்து வரும் தமிழக முதல்வரும், கேரள முதல்வரும் இதுகுறித்து தனிப்பட்ட முறையில் எங்கினும் இதுவரை பேசியதாக தெரியவில்லை.
நவம்பர் 5 ஆம் தேதி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 6 ம் தேதி பொறியாளர் சாம் இர்வினிடம் கடிதம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 7 ஆம் தேதி கடிதத்தை முடக்கியது கேரள மாநில அரசு. அணைப்பகுதிக்கு உச்ச நீதிமன்றம் வனப் பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து விலக்கு அளித்திருப்பதால்,தமிழக அரசு தாமே முன்வந்து பேபி அணைக்கு செல்லும் வழிகள் உள்ள மரங்களை வெட்டலாம் என்கிற நிலை இருந்தும், ஏன் தமிழக அரசு இதுவரை அது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை.
அணையை மத்திய நீர்வள ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் முழுமையாக ஆய்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு விட்ட நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏன் கேரள மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று கேட்பதற்கு நாதியற்றுக் கிடக்கிறோம் நாம்...
அணையை பலப்படுத்துவதற்காக 45 ஆண்டுகள் காத்திருக்கிறோம். இடையில் 22 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அணையில் பராமரிப்பு பணிகளை செய்து இருக்கிறோம். குறைந்தபட்சம் பேபி அணையை கூட நம்மை பலப்படுத்த விடவில்லை இந்த கேரள மாநில அரசு. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் தெளிவாக தீர்ப்பு 2006 ஆம் ஆண்டும், அரசியல் சாசன பெஞ்சு கொடுத்த தீர்ப்பு 2014 ஆம் ஆண்டு நிலுவையில் இருக்கும் நிலையில், எதற்காக கேரள மாநில அரசு நம்மை அணையை பராமரிக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அணையை பலப்படுத்த வேண்டிய நாம், கேரள மாநில அரசினுடைய பாராமுகத்தால் கையறு நிலையில் இருக்கும் நிலையில்,, எந்த அடிப்படையில் அதே உச்ச நீதிமன்றம் மத்திய நீர்வள ஆணையத்திற்கு, அணையை 12 மாதங்களுக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்கிற பரிந்துரையை செய்ய முடியும்.
பெரியாறு பாசனத்தின் கீழ் வரக்கூடிய 10 லட்சம் விவசாயிகளும், ஒரு கோடி குடிநீர் பயனாளர்களும் முட்டாள்களா...? அணையை பலப்படுத்துவதற்கு தமிழகத்திற்கு ஒரு வாய்ப்பை கொடுத்துவிட்டு தான் அணையை ஆய்வு செய்ய வேண்டும். கேரள மாநில அரசின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளால் அணையை பலப்படுத்த முடியாத நிலையில் ஆய்வை உடனே நிறுத்துவதற்கு தேசிய நீர்வள ஆணையம் முடிவை எடுக்க வேண்டும். இனியும் கேரள மாநில அரசின் சர்வாதிகாரத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது.
வரும் 22 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, குமுளி எல்லையில், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாய சங்க தலைவர்களும் ஒருங்கிணைந்து கேரள மாநில அரசுக்கு எதிராகவும், தொடர்ந்து முல்லை பெரியாறு அணை உடையப் போவதாக விஷமப் பிரச்சாரத்தை பரப்பி வரும் கேரள காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், வலது இடது சிந்தனை கொண்ட பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும் மக்கள் திரள் முற்றுகை போராட்டம் நடக்க இருக்கிறது. நீர் உரிமை என்பது வாழ்வாதார உரிமையின் தொடக்கம் என்பதை உணர்ந்து, உணர்வுள்ள ஒவ்வொருவரும் அணி திரள்வோம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu