டிசம்பர் 5ல் இருசக்கர வாகன பயணம் ஏன் ? 5 மாவட்ட விவசாயிகள் விளக்கம்

டிசம்பர் 5ல் இருசக்கர வாகன பயணம்  ஏன் ? 5 மாவட்ட விவசாயிகள் விளக்கம்
X

முல்லை பெரியாறு அணையில் உபரிநீர் வெளியேறுவதை பார்வையிடும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் (பைல் படம்)

டிசம்பர் 5-ல் இருசக்கர வாகன பயணம் ஏன் என்பது குறித்து 5 மாவட்ட விவசாயிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்து விளக்கம் அளித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணையினை பாதுகாக்க வேண்டும் என டிசம்பர் 5ம் தேதி நடத்தும் இருசக்கர வாகன பயணம் எதற்காக என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாங்கள் எப்போதும் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அரசுக்கு எதிராகவோ இருந்ததில்லை...இருசக்கர வாகனப் பயணம் எதற்காக என்பது குறித்தான விளக்கம்...

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள மாநிலம் முழுவதும், குறிப்பாக இடுக்கி மாவட்டத்தை மையப்படுத்தி நடந்துவரும் விஷமப் பிரச்சாரங்கள், திட்டமிட்ட முறையில் நடந்து வருவதை தமிழக அரசு நன்கறியும்.

தொடர்ச்சியாக கேரள மாநிலத்து அரசியல்வாதிகள், இடுக்கி மாவட்டத்தை முற்றுகையிட்டு ,ஆர்ப்பாட்டம் ,போராட்டம், நடைபயணம் என்று சாமானிய மக்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர், கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன் குரியா கோஸ், கேரள மாநில அமைச்சர்கள் ரோஸி அகஸ்டின், ராஜன், பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் வாழூர் சோமன், எம் எம் மணி, பி.ஜே. ஜோசப்,,, மற்றும் ஹைரேஞ் சம்ரக்ஷன சமிதி, முல்லைப்பெரியாறு அஜிடேஷன் கமிட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,,, உள்ளிட்ட கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறது...

அணை மீதான நம்பகத்தன்மையை கேலிக்கூத்தாக்கும் வகையில் வழக்கறிஞர் ரசூல் ஜோய் நடத்தி வரும் save Kerala brigade அமைப்பு பரப்பி வரும் விஷமப் பிரச்சாரம்... ஒருபுறம் டாக்டர் ஜோ ஜோசப், ஜார்ஜ் போன்ற இனவெறியர்களின் வழக்கு மறுபுறம் என முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக 8 திசையிலிருந்தும் நெருக்கடி முற்றி நிற்கிறது...

அந்த அணையை நம்பி இன்னமும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் காத்துக் கிடக்கிறார்கள்...தண்ணீர் சென்று சேராத கண்மாய்கள் நூற்றுக்கணக்கில் இப்போது வரை வறண்டு கிடக்கிறது...

கீழப்பூங்குடி, பிரவலூர், ஒக்கூர், போன்ற கிராமங்களிலுள்ள பெரியாறு பிரதான கால்வாய் கண்மாய்களில் இன்னமும் தண்ணீர் எட்டிப் பார்க்கவில்லை. சிங்கம்புணரி கால்வாய், மறவமங்கலம் கால்வாய் உள்ளிட்ட பெரியாறு கால்வாய் பாசன பகுதிகளில் இன்னமும் புதர் மண்டித்தான் கிடைக்கிறது. இந்த நிலையில் தான் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா வழியாக கோதமங்கலம் வரை, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகன பேரணி ஒன்றை நடத்துவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் அதுகுறித்த பிரச்சாரங்கள் கொடிகட்டி பறக்கிறது...தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக, வாழ்வாதாரமாக இருக்கும் இந்த முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட துடிக்கும் மலையாள இனவெறியர்களின் அடாத செயலை கண்டித்து, ஐந்து மாவட்ட சங்கமும் அதே ஐந்தாம் தேதி வைகை அணையிலிருந்து லோயர் கேம்ப் வரை ஒரு இருசக்கர வாகன பயணத்தை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்...

மலையாள நாட்டில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்கிறது அந்தப் பேரணி, தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தும் பயணம் அந்த முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும் என்கிறது.,அவர்களுக்கு அது அரசியல்., எங்களுக்கு அது வாழ்க்கை.

எனவே எங்களுடைய கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து கொண்டு, தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எங்களுடைய இருசக்கர வாகனப் பயணத்தை பரிசீலிக்க வேண்டும்..

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல ,,,அதே நேரத்தில் எங்களை எதிர்க்கிறவர்களுக்கு தக்க பதிலடியை கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.இவ்வாறு 5 மாவட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த தலைவர் எஸ் ஆர் தேவர், முதன்மை செயலாளர் இ.சலேத்து, பொதுச் செயலாளர் பொன் காட்சி கண்ணன், பொருளாளர் லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் ஆகியோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!