விக்கிரவாண்டியில் என்ன ஆனது அதிமுக வாக்குகள்?’

விக்கிரவாண்டியில் என்ன  ஆனது அதிமுக வாக்குகள்?’

கோப்பு படம் 

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையிலும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் குறைந்தபாடில்லை.

தேர்தல் சமயத்தில் விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நல குறைபாடு காரணமாக மரணமடைய, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகச் சொல்லி விட்டார்கள். எதிர்க்கட்சி போட்டியிடாத நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக இடைத்தேர்தலில் போட்டியிட்டது.

திமுக சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட, பாமக சார்பில் சி. அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். அதிமுக தேர்தல் களத்தில் இல்லாத நிலையில் தி.மு.க, பா.ம.க, நா.த.க என மும்முனை போட்டி நிலவுவதாகச் சொல்லப்பட்டது. இருந்தபோதிலும், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்குப் பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தினால் இரண்டு முனை போட்டியாகவே இந்த தேர்தல் ஆரம்பம் முதலே இருந்துவந்தது. 29 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக சார்பில் இடைத்தேர்தலுக்காக பெரும் அமைச்சர் பட்டாளம் களமிறக்கி விடப்பட்டது. பாமக சார்பில் அன்புமணி, சௌமியா அன்புமணி ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லாத நிலையில், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி திமுக-வின் மூத்த அமைச்சர்கள் பலரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர்.

ஜூலை 10-ம் தேதி விறுவிறுப்பாக நடந்து முடிந்த தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவாகியிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை முதலே தொடங்கி நடைபெற்று வந்தது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி கடைசி சுற்று எண்ணிக்கை வரை திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 21 சுற்றுகள் முடிவில் 1,24,053 வாக்குகளைப் பெற்று அன்னியூர் சிவா வெற்றி பெற்றிருந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட பாமக வேட்பாளர் வெறும் 56,296 வாக்குகளை மட்டுமே வாங்கியிருந்தார். சுமார் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் பாமக வேட்பாளரைத் தாண்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட மீதமுள்ள அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். திமுக வெற்றியை அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரிதாகக் கொண்டாடி வருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின், "மக்களவைத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியிலிருந்து பின்வாங்கியது.

பாஜக, தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை. தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் "திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்குக் கிடைத்த வெற்றி. டோக்கனுக்கு கிடைத்த வெற்றி. வேட்டி- சேலைகளுக்குக் கிடைத்த வெற்றி. தங்க மூக்குத்திகளுக்குக் கிடைத்த வெற்றி.வெள்ளமாகப் பாய விடப்பட்ட மதுவுக்குக் கிடைத்த வெற்றி. திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்குக் கிடைத்த வெற்றி. வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர்.

ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றைப் புறக்கணித்து விட்டு 56,261 வாக்காளர்கள் பாமக வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி" என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்குச் சென்றது என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம், "அதிமுக தேர்தலைப் புறக்கணித்ததிலிருந்தே அதிமுகவின் வாக்கை யார் வாங்குவது என்ற போட்டியே திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியிடையே நிலவியது. யாருடனும் கூட்டணி இல்லை என்று சொல்லும் நாம் தமிழர் கட்சி இந்தமுறை, `அதிமுக போட்டியிடவில்லை. அந்த வாக்குகளை எங்களுக்குச் செலுத்துங்கள்’ என்று சொல்லி வாக்கு கேட்டார் சீமான்.

பாமக தேர்தல் மேடைகளிலும், பிரசாரத்திலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்களை வைத்து வாக்கு சேகரித்து பாமக. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி வி.சி.க வேட்பாளர் பெற்ற வாக்குகள் 72,188, இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். பாமக வேட்பாளர் 32,198 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 8,352 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க 32,198 வாக்குகளைப் பெற்றது. அதிமுக-வின் 65 ஆயிரம் வாக்குகள்தான் அனைவரின் குறியாக இருந்தது. 2021-ம் ஆண்டு தேர்தலை எடுத்துக்கொண்டால், பாமக கடந்த தேர்தலை விட 24 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறது.

நாம் தமிழர் கட்சி கூட கடந்த தேர்தலை விட அதிக வாக்குக்குள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் கடந்த முறை அதிமுகவுக்குச் சென்ற வாக்குகள் தற்போது பெருமளவில் சிதறியிருக்கிறது. அதேநேரத்தில், இதற்கு முன்பாக நடைபெற்ற இடைத்தேர்தலை எல்லாம் கணக்கில் கொண்டால், ஒரு பொதுத் தேர்தலை விட இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எப்போதுமே ஆளும் கட்சிக்குச் சாதமாகவே பெரும்பாலான நேரங்களிலிருந்திருக்கிறது.

2019-ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அன்றைய ஆளும் அதிமுகவுக்குச் சாதகமாகவே இருந்ததை மறந்துவிட முடியாது. அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் கூட அதிமுக போட்டியிட்டிருந்தபோதிலும் ஆளும் திமுக அரசின் கூட்டணியின் சார்பில் போட்டியிட வேட்பாளர் வெற்றிபெற்றதை நாம் பார்த்தோம். ஒரு இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக் கடந்தகால தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டு யாருக்குச் சென்றது என்று சொல்வது சரியாக இருக்காது. பொதுத் தேர்தல் களம் என்பது வேறு. இடைத்தேர்தல் களம் என்பது முற்றிலும் வேறு..." என்றார்கள்.

Tags

Next Story