ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு கூட்டம் அதிகம் ?
பைல் படம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். குறிப்பாக அண்ணாமலை பிரச்சாரத்தின் போது அதிக அளவில் நேற்று மக்கள் கூடியதாக தமிழக பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
தமிழக பாஜகவின் மாநிலத் தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘’ சென்ற வாரம் முன்னாள் முதலமைச்சர் ஈபிஎஸ் ஈரோடு வந்த போது அவருடைய கூட்டத்திற்குச் செல்லக் கூடாது என ரூ. 1000 கொடுத்து பட்டியில் அடைத்து வைத்தனர் திமுகவினர். அதனால் கூட்டம் வரவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையார் வரும்போது நேற்று ரூ. 2000 கொடுத்தனர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்றனர்’’ என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவு அதிமுகவினரைக் கொதிப்படையச் செய்துள்ளது. இதையடுத்து அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப்பிரிவினர் ‘’மன்னிக்கவும் உண்மை நிலவரம் சொல்ல வேண்டி இருக்கு. நேற்று தமிழக பிஜேபி இருந்து 50 பேர் மட்டுமே வந்தனர். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த எங்கள் அதிமுக பொறுப்பாளர்கள் அதிமுக தொண்டர்களை அனைத்து இடங்களில் இருந்து வர வைத்து கூட்டத்தை காட்டினர்'’ என பதிலடி கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அதிமுக, பாஜகவினரிடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளன.ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் 3 நாட்கள் பரப்புரை மேற்கொண்டார்.அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்ய உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu