இலவசங்களால் ஆதாயம் அடைவது யார்?

இலவசங்களால் ஆதாயம் அடைவது யார்?
X

பைல் படம்.

மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்களால் ஆதாயம் அடைவது யார் என்பது குறித்து தற்போது விரிவாக பார்ப்போம்.

இலவசங்கள் தொடர்பாக விரிவான விவாதத்திற்குள் நாம் செல்லும் முன் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இதில் வேண்டும், வேண்டாம் எனக்கூறும் இரு தரப்பு அரசியல்வாதிகளுக்குமே ஒரே நோக்கம் தான் உள்ளது.

வெங்கய்யா நாயுடுவில் தொடங்கி பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வரை பல அரசியல்வாதிகள் தெரிவிப்பது, மக்களின் தேவையை அறிந்து ஒன்றை இலவசமாக தருவது ஒரு அரசியல் கட்சி அல்லது அரசாங்கம் எடுக்கும் முடிவு. இதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்கின்றனர்.

இலவசங்கள் தேவை என்பதற்கு பின்னணியிலும், இலவசங்கள் வேண்டாம் என்பதற்கு பின்னணியிலும் ஒளிந்து கொண்டிருப்பது ஒரே நோக்கம் தான். இன்றைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளல்ல. இவர்கள் தீட்டும் திட்டங்களும், போடும் சட்டங்கள் யாவுமே தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், முதலாளிகளின் நலனுக்காகவும் தான் உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, இலவசங்கள் குறித்த ஆழமான விவாதம் தேவை எனவும், இலவச அறிவிப்புகளையும், மக்கள் நல வளர்ச்சி திட்டங்களையும் நாங்கள் பிரித்து பார்க்கவே விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதால் அவர்கள் கல்வி கற்று பயனடைவர். அதுபோல பிற்படுத்தப்பட்ட கிராம மக்களின் முன்னேற்றத்திற்காக கால்நடைகள் வழங்கப்படுகின்றது. 100 நாட்கள் வேலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களை கண்மூடித்தனமாக இலவசங்கள் என கூறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதே சமயம் இலவசத்திற்கான சுமைகளை பணக்காரர்கள் தலையில் ஒரு போதும் அரசுகள் ஏற்றிவிடாது. அதிலும் பயன்பெறக் கூடியதாகவே முதலாளி வர்க்கம் உள்ளது. ஆகச் சுமையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியவர்களும் ஏழை, எளிய மக்கள் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், 'தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் இஷ்டத்துக்கு இலவச அறிவிப்புகளை வெளியிடுவது பொருளாதார சீரழிவுக்கு வழி வகுக்கும். குறிப்பாக இலவச மின்சார அறிவிப்பால் மின் கழகங்கள் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்திக்கின்றன என்றார்.

மத்திய அரசு சொலிசிடர் ஜெனரலின் இந்த வாதங்களின் பின்னால், தற்போது மின்சாரத் துறை தனியார்மயமாக்கி அதானி போன்ற மின் உற்பத்தியாளர்களின் நலன்களே.

அரசின் கொள்கை முடிவு, மக்கள் நலதிட்டம் என்ற பெயரில் அறிவிக்கப்படுவை யாவும் பொது நலன் சார்ந்தவையா? டாஸ்மாக் கடைகள் மக்கள் வாழ்வை சூறையாடுகின்றன என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இது அரசின் கொள்கை முடிவு என்று வாதிடப்படுகிறதே? அந்த பணத்தில் தான் மக்கள் நலத் திட்டங்கள் செய்யப்படுகின்றனவாம். ஏழை, எளியோரின் மனைவி, பிள்ளைகளை பட்டினி போட வைத்து பிடுங்கிய பணம் தானே; டாஸ்மாக்கால் யாருடைய கஜானா நிரம்புகிறது..? அரசாங்கம் பனங் கள்ளை ஆதரித்தால் லட்சக்கணக்கான விவசாயிகள் பலனடைவர்களே.

ஏழ்மை தலைவிரித்தாடிய ஒரு காலகட்டத்தில் காமராஜர் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் கொண்டு வந்தார். இதனால் கூடுதல் பள்ளிகள் ஆங்காங்கே திறக்கப்பட்டு அதிக மாணவர்கள் சேர்ந்தனர்.

இன்று பொருளாதாரம் நன்கு வளர்ந்த நிலையில், மதிய உணவு மட்டுமின்றி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசங்கள் என்ற பெயரில் 14 விதமான பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக பல ஆயிரம் கோடிகள் கணக்கு எழுதப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, தரமான கல்விக்கு உத்திரவாதமின்மை ஆகியவற்றால் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனை காரணம் காட்டி, நூற்றுக்கணக்கான அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பெற்றோர்கள் கடனை வாங்கியாவது தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த 14 இலவசங்களால் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய முதலாளிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டுமே ஆதாயம் அடைந்து வருகிறார்கள். தரமான கல்வி ஒரு அடிப்படை உரிமையல்லவா?

தமிழகத்தில் கலைஞர் 2006 ஆம் ஆண்டு ஒரு கிலோ அரசி இரண்டு ரூபாய்க்கு ரேஷனில் போடப்படும் என தேர்தல் வாக்குறுதி தந்தார். அவர் வெற்றிக்கு அது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அடுத்த தேர்தலில் ஜெயலலிதா விலையில்லா அரசி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்ததால் வெற்றி சாத்தியமானது.

ஆனால், இரண்டு ரூபாய்க்கோ அல்லது இலவசமாகவோ அரசி வேண்டும் என்றோ மக்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ரேஷனில் தரப்படுகின்ற அரிசி பொங்கி சாப்பிடும் வகையில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக அறிவித்தார். அப்போது சன் டிவியும், கேபிள் இணைப்பை தரும் சுமங்கலி கேபிள் விஷனும் தான் நிகரற்ற செல்வாக்கோடு தமிழக தொலைகாட்சி துறையில் கோலோச்சிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா இலவச கிரைண்டர், மிக்சி, டேபிள் பேன் வழங்கினார். இவை வெகு சீக்கிரம் கயலான் கடைக்கு வந்தன. இவைகள் யாவும் மக்கள் கோரிக்கை வைக்காத இலவசங்கள். ஓட்டு பெறுவதற்காகவே தரப்பட்டவைகளாக இருந்தது.

இலவசமாக மக்கள் எதிர்பார்ப்பது தரமான கல்வி, நல்ல மருத்துவம், உழைப்பதற்கான வாய்ப்பு ஆகியவையே. இந்த மூன்றிலும் வரைமுறை இல்லாமல் தனியார் நிறுவனங்கள் செழிக்கும் வகையில்தான் மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்டி வருகின்றன. ஒரு பக்கம் முதலாளிகளை செழிக்க வைத்து, மக்களை கையேந்தும் நிலையில் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் தான் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்க 25% மாணவர்கள் கட்டணத்தை அரசே ஏற்கிறது. இந்தப் பணத்தை ஏன் ஓராசியர் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும், அரசு பள்ளிகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும் செலவிடுவதில்லை?

அதேபோல், காப்பீடு என்ற பெயரில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பவர்களுக்கு அரசு செலவழிக்கும் பணம் அரசு மருத்துவமனைகளின் போதாமைக்கு செலவழிக்கலாம். ஏன் செய்வதில்லை?

தனியார் பெரு முதலாளிகளுக்கு வங்கி கடன் வாரித் தரப்படுகிறது. அவர்களால் திருப்பித் தர முடியவில்லையெனில் தள்ளுபடியும் செய்யப்படுகிறது. ஆகவே, எளியவர்களுக்கு தரப்படும் கடன்களையும் திருப்பி கேட்காதே என்பது சரியான வாதமா? அது ஏற்கனவே அரசு தனியார் பலனடைய செய்து வரும் குற்றத்தை நியாயப்படுத்திவிடாதா? அந்த தனியார் முதலாளிக்கு தரப்பட்ட கடன்களில் கறார்த் தன்மை வேண்டும். அதை வசூலித்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்' என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே இலவசங்கள் வேண்டும் என்பதும், வேண்டாம் என்பதும் முதலாளித்துவ வர்க்க நலன் சார்ந்து செயல்படும் அரசாங்கத்தை பொறுத்த அளவில் ஒன்று தான். ஒரு மக்கள் நல அரசு செய்ய வேண்டியது, மக்களை வாங்கும் சக்தி மிக்கவர்களாக ஆக்குவது தான். அதற்கு தடையாக இருக்கும் சுயநல சக்திகளை விலக்கி வைப்பது தான்.

தற்போது இலவச மின்சாரத்தை எதிர்க்கும் பாஜக அரசு உ.பி, மற்றும் குஜராத் தேர்தல்களில் எத்தனையெத்தனை இலவச அறிவிப்புகளை தந்துள்ளன எனப் பார்க்க வேண்டும்.

இயற்கை தேவைக்கும் அதிகமாகவே மனிதகுலத்திற்கு அள்ளித் தருகிறது. மொத்த நிதி ஆதாரங்களில் 90 சதமானவற்றை 10 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் அபகரித்து வைத்துள்ளனர். மீதமுள்ள 10 சதமானவற்றை 90 சதவீத மக்கள் பெற்றுக் கொள்வதும் கூட அந்த செல்வந்தர்களை சார்ந்து தானே உள்ளது. அது தான் தகர்க்கப்பட வேண்டும்.

மக்கள் சுய சார்போடு சுதந்திரமாக வாழ உத்திரவாதம் இருந்தலே போதுமானது. சிறு, குறுந்தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்கான கை, கால்களுடனும், தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளும் அறிவுடனும் தான் பிறக்கிறான். மக்கள் அரசாங்கத்தையோ, தனியொரு முதலாளிகளையோ சார்ந்து இல்லாமல் வாழும் உத்திரவாதத்தை பாதுகாப்பது தான் மக்கள் நல அரசு செய்ய வேண்டியதாகும்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!