தேமுதிக எந்தப்பக்கம்.. பிரேமலதா சூசகம்
தேமுதிக பொருளாளர் பிரேமலதா
2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இது குறித்து விஜயகாந்தே விரைவில் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு அண்ணாமலை நடத்தும் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு வந்ததாகவும் அதனால் தங்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளரை தங்கள் பிரதிநிதியாக அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பாஜக தலைமை தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதையும் அவர் மறுக்கவில்லை.
இதனிடையே திடீரென காவிரி விவகாரம் பற்றி டிராக்கை மாற்றிய பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் துரைமுருகனை கடுமையாக விமர்சித்தார். வாய்ச்சவடாலை தவிர துரைமுருகனுக்கு எதுவும் தெரியாது என்றும் 60 ஆண்டுகளாக காவிரி பிரச்னைக்கு ஏன் தீர்வு காணவில்லை எனவும் வெளுத்து வாங்கினார்.
காவிரி பிரச்சனையில் நிரந்தர தீர்வு கிடைப்பதற்கான முயற்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தான் முன்னெடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். காவிரி பிரச்சனைக்காக அன்று அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் விஜயகாந்த் பிரதமரை சந்தித்தது பற்றி நினைவு கூர்ந்தார்.
எதற்கெடுத்தாலும் தன்னை சீனியர் மினிஸ்டர் என்று பெருமை அடைத்துக் கொள்ளும் துரைமுருகன் மற்றவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது என்பதை போல் பேசுவார் என கிண்டல் அடித்தார்.
இதன் மூலம் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்பது தெரிய வருகிறது. இதனிடையே அதிமுக, பாஜக தரப்பிலும் இன்னும் தேமுதிகவை அணுகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் தேமுதிக எந்தப்பக்கம் சாயப்போகிறது என்பது விரைவில் தெரியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu