குச்சனுாருக்கு போனா என்ன வாங்குவீங்க ?

குச்சனுாருக்கு போனா என்ன வாங்குவீங்க ?
X

தேனி மாவட்டம், குச்சனுார் சனீஸ்வரபகவான் கோயில் விழாவில் இரும்பு பொருள் வாங்க குவிந்திருக்கும் பக்தர்கள்.

குச்சனுாரில் மூன்றாவது சனி வார பெருந் திருவிழா (ஆகஸ்ட் 5) இன்று நடைபெறுகிறது

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்திருவிழாவான குச்சனுாரில் ஆடி மாதம் ஐந்து சனிக்கிழமைகளிலும் பெரும் திருவிழா நடக்கும். விழாத்திடல் 3 கி.மீ., துாரம் வரை இருக்கும். வழக்கமாக கோயில் விழாத்திடல்களில் இருக்கும் அத்தனையும் இங்கும் கிடைக்கும்.

மூன்றாவது சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கே முல்லையாற்றிலும், இங்குள்ள சரயுநதியிலும் குளித்து விட்டு பக்தர்கள் 4 மணிக்கே பகவானை தரிசிக்க வந்து விடுவார்கள். மூன்றாவது வார விழா என்பதால் தனிச்சிறப்புடன் அதிக கூட்டம் இருக்கும். இப்போதும் இதே கூட்டம் உள்ளது. முதல் நாள் இரவே பல ஆயிரம் பக்தர்கள் கோயில் திடலுக்கு வந்து விட்டனர்.

பொதுவாக சனீஸ்வர பகவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன வாங்குவார்கள் என்பதை வைத்து ஒரு ஆராய்ச்சியே நடத்தலாம். பெரும்பாலும் இங்கு வருபவர்கள் வாங்கும் பொருட்களில் முதலிடம் பிடிப்பது இரும்பு சார்ந்த பொருட்கள். அதாவது இரும்பாலான தோசைக் கல், பனியாரக்கல், ஆம்லெட் போட உதவும் இரும்பு கரண்டி, பல்வேறு வகை அரிவாள்கள், கத்திகள், இரும்பு பாத்திரங்களை வாங்குவார்கள். ஒரு குடும்பத்திற்கு ஒன்றாவது வாங்குகின்றனர்.

காரணம். சனி பகவான் இரும்பின் அம்சம். அவருக்கு பிடித்த உலோகம் இரும்பு என்பாதல், இரும்பினை வாங்கி வருவதன் மூலம் அவரது அருளை பெற முடியும் என்று கிராம மக்களிடம் இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. எனவே கோயிலுக்கு வரும் கிராம மக்கள் இரும்பு பொருட்களை வாங்கிச் செல்வார்கள். நகர்பகுதி மக்களிடம் இது போன்ற நம்பிக்கைகள் எல்லாம் இல்லை. அவர்கள் தங்களுக்கு பிடித்தது எதுவோ அதனை வாங்கிச் செல்கின்றனர்.

Tags

Next Story